மரத் தெய்வங்கள்
பழங்காலம் முதல் இன்று வரை மரங்கள் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றன. அவற்றுள் சில*
- ஆல்
- அரசு
- இரட்டி (Zizyphus ஓர் jujube)
- இலஞ்சி
- கடம்ப மரம்
- பலா
- வாகை
- வன்னி
- வெள்ளி (wood apple)
- வேம்பு
- வேங்கை
பவுத்த மதத்தில் மர வழிபாடு
பவுத்த நூல்களில் இருந்து புத்தர் காலத்திற்கு முன்பே மரங்கள் வழிபாட்டில் இருந்தது தெரிகிறது. சுற்று கட்டுமானங்களோடோ, அவை இன்றி தனியாகவோ இருந்த அத்தகைய மரங்களை 'மர ஆலயங்கள்' (ருக்க-சைத்தியம், விருக்ஷ சைத்தியம் அல்லது சைத்திய விருக்ஷம்) என்று அந்த நூல்கள் அழைக்கின்றன. நறுமண நீரால் தூய்மை செய்தல், மலர்கள் மலர் மாலைகள் அணிவித்தல், சுற்றி வர மணல் தூவுதல் போன்ற சடங்குகளைச் செய்துள்ளனர்.
உருவெல ('புத்த கயா'வின் பழைய பெயர்) வில் இருந்த போதி (அரச) மரம் புத்தர் காலத்திற்கு (கி.மு. 563 - 483) முன்னரே வழிபாட்டில் இருந்தது. அந்த மரத்தில் வசித்த தேவர்கள்/ யக்ஷர்கள் இடம் திருமண, குழந்தைப் பேறு வரங்கள் வேண்டி படையலிட்டு வழிபட்டுள்ளனர்.
புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றத்தைத் தொடர்ந்து போதி மரம் பவுத்தர்களுக்கு புனிதமானதாக ஆகியது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதலே போதி மரத்தைச் சுற்றி 'போதி கர' என்னும் கோயில்கள் அமைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் அமராவதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்தூபியின் சிற்பங்களில் இரண்டு அத்தகைய அமைப்புகளைக் காட்டுகின்றன. அவை மரத்தைச் சுற்றி சதுர அல்லது வட்ட வடிவிலான இரண்டு அல்லது மூன்று தள திருச்சுற்று மண்டபங்கள், நுழைவாயில்கள் அமைந்திருந்ததை காட்டுகின்றன. இவை கோயில் திருச்சுற்றுகளில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட திருச்சுற்று மாளிகைகள் போல் உள்ளன.
![]() |
| ஸ்ரீலங்கா நீலகம என்ற இடத்தில் கண்டிபிடிக்கப்பட்ட 8-9 ஆம் நூற்றண்டு போதி கர. |
![]() |
| நீலகம போதி மர பீடம் |
சங்க இலக்கியத்தில் மர வழிபாடு
"மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப"
- குறுந்தொகை 87, கபிலர்
(பொது இடத்தில் உள்ள கடம்ப மரத்தில் வாழும் அச்சம் தரும் பழமையான கடவுள் கொடியவர்களை வாட்டும் என்பர்)
(பொது இடத்தில் உள்ள கடம்ப மரத்தில் வாழும் அச்சம் தரும் பழமையான கடவுள் கொடியவர்களை வாட்டும் என்பர்)
மரத்தடி தெய்வங்கள்
பின்னர் மரத்தில் உறைந்திருந்த தெய்வங்களை மரத்தடியில் நிறுவி மக்கள் வழிபடத் தொடங்கினர். இதில் சிறு தெய்வங்கள் மட்டுமல்ல, பெரும் தெய்வங்களும் அடங்கும்.
சங்க இலக்கியமான அகநானூறு ஆல மரத்தைச் சுற்றி செங்கற்களால் ஆன சுற்றுச் சுவர் இருந்ததையும் படையலிட்டு வழிபாடு நடந்ததையும் விவரிக்கிறது.
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து
எழுதணி கடவுள் போகலற் புல்லென்று
ஒழுகுபலி பறந்த மெழுகாப் புன்திணைப்
பால்நாய் துன்னிய பறைக்கண் சிற்றில்
குயில்காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்லிறைப் பொதியி லானே.
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து
எழுதணி கடவுள் போகலற் புல்லென்று
ஒழுகுபலி பறந்த மெழுகாப் புன்திணைப்
பால்நாய் துன்னிய பறைக்கண் சிற்றில்
குயில்காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்லிறைப் பொதியி லானே.
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
செங்கல்லாலான நீண்ட சுவரின் உத்திரங்கள் வீழந்துவிட
மணிப்புறாக்கள் விட்டொழிந்த மரம் சேர்ந்த மாடத்தினையும்
எழுதப்பெற்ற அழகிய கடவுள் வெளியேறிவிட்டதால் பொலிவிழந்து
இடைவிடாமல் நிகழும் பலி மறந்துபோன மெழுகப்படாத புல்லிய திண்ணையில்
பால்தரும் நாய் தங்கிய தேய்ந்துபோன இடத்தையுடைய சிறிய அறைகளை உடைய
கடைந்து உருவாக்கப்பட்ட தூண்கள் சிதையுமாறு நெருக்கமாகக் கூடி வேலின் முனைபோன்ற
கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக் கொண்டதால்
கூரையும் இல்லாமல் போன தாழ்வாரத்தை உடைய அம்பலத்தில்
"ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்
கால்கோள்"
- கலித்தொகை 83; மருதன் இளநாகனார்
- கலித்தொகை 83; மருதன் இளநாகனார்
(ஆலமரத்தடியில் அமர்ந்த சிவனின் மகன் முருகனுடைய விழாவின் தொடக்கம்)
கலித்தொகை ஆலமர நிழலில் இறைவனை வைத்து வணங்கியதை, “துறையும் ஆலமும், தொல்வலி மராஅமும் முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழுஉ’’ என்றும் விவரிக்கிறது.
சிவன் தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தபடி சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை உபதேசித்தார். இதை திருநாவுக்கரசர் ‘ஆலினிற் கீழிருந்து ஆரணம் ஓதி’ என்றும், மாணிக்கவாசகர் ‘அன்றாலின் கீழிருந்து அறமுறைத்தான் காணேடி’ என்றும் பாடியிருக்கின்றனர். இதனால் சிவன் 'ஆலமர்ச்செல்வன்' என்று அழைக்கப்படுகிறான்.
திருமால் ஆலிலை மேல்படுத்து மிதப்பவன். முருகன் கடம்பன்.
| சுங்கர்கள் காலக் கற்பலகை (பொ.யு.மு 2 ஆம் நூற்றண்டு) மரத்தடி சிவலிங்கத்தை வழிபட மாலை ஏந்தி நிற்கும் கந்தர்வர்கள் |
| கண்ணப்ப நாயனார் மரத்தடி லிங்கத்தை வழிபடுதல் |
| மரத்தடி நாக தேவதைகள் |
கோயில் தல மரங்கள்
கோயில்களின், குறிப்பாக சிவன் கோயில்களின் பெருமை நான்கு:
- மூர்த்தி - கோயில் கொண்ட இறைவனது பெருமை
- தலம் - இறைவன் இந்த இடத்தை தேர்வு செய்து கோயில் கொண்டதற்கான காரணம் புராணங்களால் நிறுவப்பட்ட பெருமை.
- தீர்த்தம் - இறைத்தன்மை வாய்ந்த நீர் நிலை, ஆறு
- தலமரம் - இறைத்தன்மை வாய்ந்த மரம்
தலமரம் இறை சக்தி உள்ளது. இம்மரங்களின் வழிபாடே பின்னர் கோயில் அமைப்பாக திரண்டு வந்திருக்கலாம்.
கோயில்களில் உறையும் இறைவனின் இறைத்தன்மையை தக்கவைக்க 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் இறைவனின் இறைத்தன்மை கொடிமரத்திற்கு இடம் பெயர்ந்து விடும், 13 ஆண்டுகளுக்குப் பிறகும் குடமுழுக்கு செய்யப்படாவிட்டால் இறைத்தன்மை அங்கிருந்து தல மரத்திற்கு இடம் பெயர்ந்து விடும் எனப்படுகிறது. இதிலிருந்து தலமரம் கோயிலின் இறைத்தன்மையின் பெட்டகமாக விளங்குவது தெளிவாகிறது.
பல இடங்களில் தல மரங்களின் பெயர்களே மூலவரின் பெயராகவும் தலத்தின் பெயராகவும் வழங்கி வருகின்றன.#
- ஆலமரம் - திருவாலங்காடு, திருக்குற்றாலம் (தலையாலங்கானம் ஆல்காடு)
- மாமரம் - கச்சி ஏகம்பன் (காஞ்சி)
- புன்னைமரம் - புன்னை வனம் (மைலாப்பூர்)
- மருதமரம் - திருவிடைமருதூர்
- பாதிரி - திருப்பாதிரிப்புலியூர்
- பனை - திருவோத்தூர் என்னும் செய்யாறு, திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர் என்னும் திருப்பனங்காடு
- பக்தி (இலந்தை) - பத்ரிகா ஆசிரமம்
- முல்லை - திருமுல்லைவாயில்
- கடம்பு - கடம்பவனம் (மதுரை)
- வேம்பு (வேல்) - திருவேற்காடு
- புன்கு - திருப்புன்கூர்
- நெல் - திருநெல்வேலி
நன்றிக் கடன்
*K. R Srinivasan; Temples of South India; 4th Ed; 1998 Reprint 2017; NBT
#https://ta.wikipedia.org/wiki/தலவிருட்சமும்_தலங்களும்


No comments:
Post a Comment