விமானத்தில் இறைவன் எழுந்தருளி இருக்கும் அறை 'கருவறை'. 'திருவுண்ணாழி' (திரு+உள்+நாழி) என்பது பழந்தமிழ்ப் பெயர். வடமொழியில் 'கர்ப்பகிரஹம்'.
மண்டபங்கள்
கோயிலின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பயன்பாடுகளுக்காக பலவகை மண்டபங்கள் அமைகின்றன.
மண்டுதல் என்னும் சொல்லுக்கு கூடுவது என்று பொருள் உண்டு. மண்டு, மன்று, மன்றம் ஆகிய சொற்கள் மக்கள்கூடும் பொது இடம் என்னும் பொருள் கொண்டவை. மண்டபம் = மண்டும் இடம். கோயில் மண்டபம் = கோயிலில் இறை வழிபாடு தொடர்பாக மக்கள் கூடும் இடம். மண்டபம் என்றால் அலங்காரப் பந்தல் என்ற பொருளும் உண்டு.
மண்டபங்களின் பெயர்கள்
மண்டபங்கள் தூண் எண்ணிக்கையின் அடிப்படையில் பெயர் பெறலாம். எடுத்துக்காட்டாக,
- 16 கால் மண்டபம்
- நூறு கால் மண்டபம்
- ஆயிரங்கால் மண்டபம்
மண்டபங்கள் பயன்பாட்டின் அடிப்படையில் பெயர் பெறலாம். எடுத்துக்காட்டாக,
- வாகன மண்டபம் (எடுத்துக்காட்டு: நந்தி மண்டபம் என்னும் ரிஷபக் கொட்டில்)
- கல்யாண மண்டபம்
- ஊஞ்சல் மண்டபம் (டோலோத்சவ மண்டபம்)
- நிருத்த மண்டபம் (ரங்க மண்டபம்) - ஒருபுறம் மூடப்பட்டு அங்கு மேடையுடன் இருக்கும்.
- வசந்த மண்டபம்
- அலங்கார மண்டபம்
- வாகன மண்டபம்
- தேரேற்று மண்டபம் (தேர்முட்டி மண்டபம்)
- நவராத்திரி மண்டபம்
மண்டபங்கள் அவை அமைந்துள்ள இடத்தின் அடிப்படையிலும் பெயர் பெறலாம். எடுத்துக்காட்டாக,
- கம்பத்தடி மண்டபம் (துவஜ ஸ்தம்பத்தைச் சுற்றி உள்ளது)
- நீராழி மண்டபம் (குளத்தின் நடுவில் உள்ள மண்டபம்)
- திருச்சுற்று மண்டபம்
மண்டபங்கள் வடிவத்தின் அடிப்படையில் பெயர் பெறலாம்.
- ரதகார மண்டபம் - தேர் போன்று அமைந்த மண்டபம்
மண்டபங்கள் அதை அமைத்தவர் பெயராலும் பெயர் பெறலாம்.
- ராஜகம்பீரன் மண்டபம் (தாராசுரம்)
விஜயநகர காலத்தில்தான் வெவ்வேறு விழாக்களுக்கு வெவ்வேறு மண்டபங்கள் அமைக்கும் மரபு தோன்றியது.
மண்டபங்களின் வகைகள்
சுவரால் சூழப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்து மண்டபங்கள் மூடிய மண்டபங்கள், திறந்த மண்டபங்கள் என இருவகைப்படும்.
விமானத்தோடு இணைந்த மண்டபங்கள், தனி மண்டபங்கள் எனவும் இரு வகைப்படும்
விமானத்தோடு இணைந்த மண்டபங்கள்
விமானத்தோடு இணைந்த மண்டபங்கள்
அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவை விமானத்தோடு இணைந்த மண்டபங்கள். விமானத்தின் தரைத் தளத்தின் மீதுள்ள ஹாரம் இவற்றின் மீதும் நீளலாம்.
அர்த்த மண்டபம்
- கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபம். கருவறையின் நீளத்தில் கருவறையை விடச் சிறியதாக இருந்தால் 'அர்த்த மண்டபம்' என்று அழைக்கப்படும்.
- இந்த மண்டபம் கருவறையின் நீளத்திற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், 'முக மண்டபம்' என்று அழைக்கப்படும்.
கருவறையையும் முக மண்டபத்தையும் இணைக்கும் பகுதி 'அந்தராளம்' எனப்படும். இது வெளியில் கருவறைக்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையில் உள் ஒடுங்கிய பகுதியாகத் தெரியும். அர்த்த மண்டபமாக இருந்தால், அந்தராளம் இருக்காது
| அந்தராளம் |
சாவஹாச அந்தராளம்
அர்த்த மண்டபத்திற்கும், அதை அடுத்துள்ள மகா மண்டபத்திற்கும் இடையில் அமையும் குறுகிய இடைவெளி 'சாவஹாச அந்தராளம்' அல்லது 'தேஹலி' எனப்படும். தமிழில் 'இடைநாழி'. இதன் இருபக்கமும் வாயில்களும் 'சோபானம்' என்னும் படிகட்டுகளும் அமையும்.
| இடைநாழி - தஞ்சை பெரிய கோயில் |
| விமானத் தொகுதி (இந்த அர்த்த மண்டபம் அளவினால் முக மண்டபம் என அழைக்கத் தகுந்தது) |
மகா மண்டபம்
அர்த்த மண்டபத்திற்கு முன்னால் இடைநாழியைத் தாண்டி அமைவது மகா மண்டபம். இது கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றை விட பெரியது என்பதால் இப்பெயர்.
முக மண்டபம்
மகா மண்டபத்தின் வாயிலில் உள்ள நுழைவாயில் மண்டபம். திறந்த மண்டபம்.
மண்டபங்களின் அங்கங்கள்
- இரு அங்க மண்டபங்கள் - அதிஷ்டானம், உபபீடம் இன்றி தரை மீது தூண்கள், பிரஸ்தரம் என்னும் இரு அங்கங்களை மட்டும் கொண்டு அமைந்தவை. இவை 'பாதாளாங்கணம்' என்றும் அழைக்கப்படும். இவ்வகை மண்டபங்கள் விஜயநகர காலம் முதல்தான் அமையத் தொடங்கின.
- 3 அங்க மண்டபங்கள் - அதிஷ்டானம், தூண்கள், பிரஸ்தரம் என்னும் மூன்று அங்கங்களை உடையன.
- 6 அங்க மண்டபங்கள் - கூடுதலாக பிரஸ்தரத்தின் மீது கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகிய மூன்று மேல் அங்கங்களை உடைய மண்டபங்கள். கூடுதல் தளங்களும் அமையலாம். எடுத்துக்காட்டு: வாகன மண்டபம்
| இரு அங்க நான்கு கால் மண்டபம் முன்னால் ஆறு அங்க நந்தி மண்டபம் திருவண்ணாமலை |
| 3 அங்க நந்தி மண்டபம் |
லாங்கூல பித்தி
லாங்கல பித்தி என்றும் அழைக்கப்படும். இது மண்டபத்தின் மூலைகளில் அமையும் 'ட' வடிவச் சுவர். கலப்பை வடிவம்.
| லாங்கூல பித்தி |
| லாங்கூல பித்தி |
நன்றிக்கடன்
மரபுக் கட்டடக்கலை (இரண்டாம் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
அம்பை மணிவண்ணன்; ஆகம, சிற்ப சாஸ்திரங்களில் திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்; AR பப்லிகேசன்ஸ்; 2 ஆம் பதிப்பு 2015
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
No comments:
Post a Comment