கோயில் கட்டுமானங்களான விமானம், மண்டபம், கோபுரம், பலிக்கல், கொடிமரம் போன்றவற்றின் அடித்தள உறுப்பு 'அதிஷ்டானம்' (அதிட்டானம்). தமிழில் 'தாங்குதளம்'.
அதிஷ்டானங்கள் பல துணை உறுப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பொறுத்து அதிஷ்டானங்கள் பலவகைப்படும். சிற்ப ஆகம நூல்கள் அதிஷ்டானங்களின் வகைகள், உறுப்புகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றை விவரிக்கின்றன.
அதிஷ்டானங்களின் முதன்மைப் பிரிவுகள் இரண்டு:
- பாதபந்த அதிஷ்டானம்
- பிரதிபந்த அதிஷ்டானம்
இவை இரண்டுமே காலத்தால் பழைமையானவை. பாதபந்த அதிஷ்டானம் மகேந்திரவர்மன் காலத்து (7 ஆம் நூற்றாண்டு) தளவானூர் சத்ருமல்லேசுவரம் குடைவரையில் காணப்படுகிறது. பிரதிபந்த அதிஷ்டானம் பல்லவர் கால மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களில் இடம்பெற்றுள்ளது.
- பாதம் = தூண்; பந்தம் = கட்டு; பிரதி = நகல்
- அடித்தளத்தில்ருந்து எழும் தூண்களைச் சுற்றி எழும்புவது பாதபந்தம்.
- பாதம் இன்றி, மேற்பகுதியில் பிரதி வரி என்னும் சிற்றுருப்புகளின் தொகுதி மீது அமைந்த சிற்ப வரிசையைப் பெற்று விளங்குவது பிரதி பந்தம்,
பாதபந்த அதிஷ்டானம்
பாதபந்த அதிஷ்டானம் கீழிருந்து மேலாக
- உபானம்,
- ஜகதி,
- குமுதம்,
- கண்டம்,
- பட்டிகை
என்னும் ஐந்து பேருறுப்புகளை கொண்டிருக்கும். அவை 'பஞ்ச வர்க்கம்' எனப்படும்.
அவற்றைத் தவிர 'கம்பு', 'பத்மம்' முதலான சிற்றுறுப்புகளும் இருக்கும்.
![]() |
பாதபந்த அதிஷ்டானம் - துணை உறுப்புகள் ஜம்பை ஜம்புநாதீசுவரர் கோயில் விமானம் |
1. உபானம்
அதிஷ்டானத்தின் மற்ற துணை உறுப்புகளுக்குக் கீழே தரையோடு ஒட்டிஇருக்கும் உறுப்பு. இது தரைக்கு மேல் நீண்டிருக்கும் அஸ்திவாரம் ஆகும்.
உபானம் தட்டையான முகப்பு கொண்டது. உயரம் குறைவானது. ஒன்றுக்கு மேற்பட்ட உபானங்கள் இருக்கலாம். அவை உப உபானங்கள் (உபோபானம்) என்று அழைக்கப்படும். உபோபானம் உபானத்திற்கு மேல் இருக்கும். உப உபானம் பத்மமாக இருந்தால் அது 'பத்ம உபோபானம்'.
2. ஜகதி
உபானத்திற்கு மேல் இருக்கும் உயரம் கூடிய தட்டையான முகப்பு கொண்ட உறுப்பு ஜகதி. உபானத்தை விட சற்று உள்ளே தள்ளி இருக்கும்.
3. குமுதம்
ஜகதிக்கு மேல் இருக்கும் உருண்டையான அல்லது பட்டைகளால் ஆன முகப்பைக் கொண்ட உறுப்பு. குமுதம் என்பது அல்லி மலரின் ஒரு பெயர். இது அதிஷ்டானத்தின் அடையாளம். மற்ற கோயில் கட்டட அங்கங்களில் இல்லாதது. அதிஷ்டானத்தில் மட்டுமே உள்ளது. பொதுவாக அனைத்துவகை அதிஷ்டானங்களிலும் இருப்பது. அதிஷ்டானத்தின் வகையைப் பொறுத்து மற்ற உறுப்புகள் மாறலாம். ஆனால் பொதுவாக எவ்வகை அதிஷ்டானம் என்றாலும் குமுதம் இருக்கும். உப பீடமும் அதிஷ்டான உறுப்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அதில் குமுதம் இருக்காது.
குமுதம் அதன் முகப்புத் தோற்றத்தை வைத்து 'உருள் குமுதம்', 'பட்டைக் குமுதம்' என இருவகைப்படும்.
உருள் குமுதம்
உருள் குமுதம் வடமொழியில் விருத்த குமுதம் எனப்படும் (விருத்தம் - வட்டம்).இவை தட்டையான கல்லின் முகப்புத் தோற்றம் மட்டுமே என்பதால் உருள் குமுதம் முழு வட்ட வடிவம் உடையது அல்ல, முகப்பு அரை வட்டம் மட்டுமே ஆகும்.
உருள் குமுதம் அலங்காரங்கள் பெரும் போது 'கடக விருத்தக் குமுதம்', 'சிலம்புக் குமுதம்' என்று மேலும் வகைப்படுகிறது.
கடக விருத்தக் குமுதம்
கடகம் என்பதன் பல பொள்களுள் ஒன்று வளையல் என்பது. உருள் குமுதத்தின் மீது இணையான வரி அலங்காரங்களோடு வளையல் அடுக்கு போல அமைக்கப்படுவது கடக விருத்தக் குமுதம்.
சிலம்புக் குமுதம்
கடக விருத்த குமுதத்தில் அடுக்கி வைக்கப் பட்ட சிலம்புகளைப் போன்ற அலங்காரங்களோடு காணப்படுவது.
![]() |
சிலம்புக் குமுதம் - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் |
பட்டைக் குமுதம்
பட்டைக் குமுதம் அதனை முகப்புப் பட்டைகளின் எண்ணிக்கையை வைத்து 'முப்பட்டைக் குமுதம்', 'எண்பட்டைக் குமுதம்', '16 பட்டைக் குமுதம்', என வகைப் படும்.
ரத்தின பட்டைக் குமுதம்
முப்பட்டைக் குமுடத்தின் முகப்புப் பட்டையில் ரத்தினங்கள் பதித்தது போன்று அமைந்தது இவ்வகைக் குமுதம். பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், பனைமலை கோயில் ஆகிய கோயில்களில் காணப்படுகிறது.
4. கண்டம்
ஜகதிக்கு மேல் இருக்கும் தட்டையான முகப்பு கொண்ட உறுப்பு. கண்டம் என்றால் கழுத்து. கழுத்து போல உள்ளடங்கி இருக்கும் உறுப்பு. கண்டம் மேலும் கீழும் கம்பு எனப்படும் சிற்றுருப்பைக் கொண்டிருக்கும்.
பாதபந்த அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள தூண்கள் கீழே நீண்டு கண்டம் பகுதியில் புடைப்பாக தெரியும். இது 'கண்ட பாதம்' எனப்படும். பாதம் என்றால் தூண். தரை மட்டத்தில் இருந்து எழும் தூணைச் சுற்றி அதிஷ்டான உறுப்புகள் அமைவதால் இவ்வகை அதிஷ்டானம் பாதபந்த அதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது.
5. பட்டிகை
அதிஷ்டானத்தின் மேல் உறுப்பு. கண்டத்திற்கு மேல் இருக்கும் பலகை போன்ற தட்டையான முகப்பு கொண்ட உறுப்பு. 13 ஆம் நூட்றாண்டு வரை வரை முகப்பு வெறுமையாக இருந்தது. விஜயநகர காலத்தில் இருந்து முகப்பு கொடிகருக்கு போன்றவற்றால் எளிமையாக அணி செய்யப்ப்ட்டு இருக்கலாம்.
கம்பு (சிற்றுறுப்பு)
- கம்பு என்பது மற்ற பேருறுப்புகளை பிரிக்கும் தட்டையான முகப்பு கொண்ட சிற்றுறுப்பு ஆகும்.
- இது கண்டத்தின் மேலும் கீழும் எப்போதும் இடம் பெறும்.
- அதிஷ்டானத்தின் மேல் அதற்கும் கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் அமையும் கம்பு உபரிக் கம்பு அல்லது மேற்கம்பு எனப்படும்.
- மற்ற உறுப்புகளுக்கு இடையேயும் அதிஷ்டானத்தின் வகையைப் பொறுத்து கம்புகள் அமையும்.
பிரதிபந்த அதிஷ்டானம்
அதிஷ்டானத்தின் உச்சியில் பிரதிவரி இடம் பெற்றால் அவ்வகைத் அதிஷ்டானம் பிரதிபந்த அதிஷ்டானம் என்று பெயர் பெறும். பிரதிவரி கீழிருந்து மேலாக ஆலிங்கம், அந்தரி, பிரதி வாஜனம் என்ற நான்கு உறுப்புகள் சேர்ந்து அமைந்ததாகும்.
பிரதிபந்த அதிஷ்டானத்தில் கீழிருந்து மேலாக
- உபானம்,
- ஜகதி,
- குமுதம்
- பிரதிவரி
என்னும் நான்கு உறுப்புகளே பொதுவாக இடம்பெறும். சிலவகை பிரதிபந்த அதிஷ்டானங்களில் இவ்வுறுப்புகள் வேறுபடலாம்.
பிரதிவரியின் மேல் பொதுவாக வியாழங்கள் (யாளிகள்) வரிசையாக பிரதிவரியை மறைத்தவாறு அமைந்திருக்கும். எனவே குமுதத்திற்கு மேல் இத்தகைய 'வியாழ வரி' (யாளிவரி) இருந்தால் அவ்வரியைப் பிரதிவரி என்றும் அந்தத் அதிஷ்டானத்தைப் பிரதிபந்தத் அதிஷ்டானம் என்றும் கொள்ளலாம். வியாழங்களுக்குப் பதிலாக யானை, சிம்மம் முதலிய மிருகங்களும் அமையலாம். பற்கள் எனப்படும் உருவ வேலைப்பாடு அற்ற செவ்வக துண்டுகளின் வரிசையும் அமையலாம்.
![]() |
பிரதிபந்த அதிஷ்டானம் - ஆவூர் சிவன் கோயில் (ஜகதியின் பகுதியும் உபானமும் புதைந்துள்ளன) |
பிரதி வரியின் திருப்பங்களில் இரு பக்க வரிகள் வெளி நீண்டு அவற்றின் முகப்புகளில் ஒரு மகரம் வாயைத் திறந்து கொண்டிருக்க அதன் வாயில் வீரர்கள் காட்டப்படுவர். இவ்வமைப்பு 'மகர துண்டம்' எனப்படும்.
பத்மபந்த அதிஷ்டானம்
பத்மம் என்றால் தாமரை. இதழ் விரித்த தாமரைகளின் வரிசையாக அதிஷ்டானத்தில் இடம்பெறும் அலங்காரம் இருவகைப்படும்.
பத்ம ஜகதி (மகா பத்மம்)
ஜகதிக்கு பதிலாக இதழ் விரித்த தாமரை தலைகீழாக கவிழ்ந்து இடம்பெறுவது பத்ம ஜகதி எனப்படும். மகாபத்மம் என்றும் அழைக்கப்படும். இது ஒரு பேருறுப்பு. பத்ம ஜகதியை உடைய அதிஷ்டானம் பத்மபந்த அதிஷ்டானம் எனப்படும். பத்மபந்தம், பாதபந்த மற்றும் பிரதிபந்த அதிஷ்டான வகைகள் இரண்டிலுமே அமையலாம்.
![]() | |
பாதபந்த வகை அதிஷ்டானத்தில் மகாபத்மம்
|
![]() |
பிரதிபந்தத்தில் பத்மபந்த அதிஷ்டானம் கூழம்பந்தல் |
![]() |
பிரதிபந்தத்தில் பத்மபந்த அதிஷ்டானம் மூவர் கோயில், கொடும்பாளூர் By Kasiarunachalam - சொந்த முயற்சி, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=55888761 |
சிறு பத்மம்
சிறு பத்மம் என்னும் இதழ் விரித்த தாமரைகளின் வரிசை கம்பு போன்ற ஒரு சிற்றுறுப்பு ஆகும். இது கம்பு போன்று பேருறுப்புக்குகளுக்கு இடையே இடம் பெரும்.
- ஒன்று வெளித்தள்ளியும் மற்றது உள்தள்ளியும் இருக்கும் இரு பேருறுப்புகள் சேரும் மூலைகளை அழகாக்குகிறது.
- அவற்றிற்கு இடையேயான உயரத்தைக் கூட்டுகிறது.
சிறு பத்மம் இருவகைப்படும்.
1. ஒரு பேருருப்பின் மேல் இருக்கும் பத்மம் ஊர்த்துவ பத்மம் எனப்படும்.
2. ஒரு பேருருப்பின் கீழே இருக்கும்பத்மம் அதோ பத்மம் எனப்படும்.
![]() | |
சிறு பத்மம்
|
கபோதபந்த அதிஷ்டானம்
கபோதம் என்னும் பிரஸ்தர உறுப்பு அதிஷ்டானத்தில் இடம்பெற்றால் அது கபோதபந்தம் எனப்படும். பாதபந்த மற்றும் பிரதிபந்த அதிஷ்டானம் ஆகிய இரண்டிலுமே கபோதம் இடம் பெறலாம்.
- பாதபந்த அதிஷ்டானத்தில் - பட்டிகைக்கு பதிலாக கபோதம் அமையும்
- பிரதிபந்தத் அதிஷ்டானத்தில் பிரதிவரிக்குக் கீழே கூடுதல் உறுப்பாக கபோதம் அமையும்
![]() |
பாதபந்த அதிஷ்டானத்தில் கபோதபந்தம் பட்டிகைக்குப் பதிலாககக் கபோதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜ கோபுரம் |
![]() |
பிரதிபந்தத்தில் கபோதபந்தம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிளி கோபுரம் |
கபோத பந்தம் கர்னாடகத்தில் அதிகம் காணப்படுகிறது.
பத்ம கபோத அதிஷ்டானம்
கபோதம், மகா பத்மம் இரண்டும் ஒரே அதிஷ்டானத்தில் அமைந்திருக்கலாம்.
கல்வெட்டுகள், சிற்பங்கள், அணிகள்
ஜகதி, குமுதம் முதலிய பகுதிகளில் கல்வெட்டுகள் காணப்பெறலாம்.
கண்டப்பகுதி அகன்று சிற்பங்களும், சிற்பத் தொகுப்புகளும் இடம் அளிக்கலாம்.
![]() |
கபோத பத்ம பந்த அதிஷ்டானம் - பாத பந்த வகையில் பட்டிகைக்குப் பதிலாகக் கபோதம், ஜகதிக்குப் பதிலாக மகா பத்மம். அகன்ற கண்டத்தில் சிற்பம். வழித்துணை நாதர் கோயில், விரிஞ்சிபுரம், வேலூர் அருகில். |
வர்க்கபேதம்
அதிஷ்டானம் பத்திகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பத்தியும் வெவ்வேறு வகை தங்குதளத்தைக் கொண்டிருத்தல் வர்க்கபேதம் எனப்படும்.
![]() |
வர்க்க பேதம்ம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வல்லாளன் கோபுரம் |
கூடுதலாக
அதிஷ்டானத்தின் மற்ற பெயர்கள்
கட்டடத்திற்கு முதல் உறுப்பு என்பதால் 'ஆத்யாங்கம்', கட்டடத்திற்கு அடிப்படை என்பதால் 'ஆதாரம்' என்ற பெயர்களும் உண்டு. மேலுள்ள அனைத்தையும் தாங்குவதால் 'பூமி' என்றும் அழைக்கபடுகிறது. பூமி என்ற பொருள் கொண்ட 'தரணி, புவனம், பிருதிவி, வஸ்த்வாதாரம், தராதலம், தலம்' ஆகிய பெயர்களும் அதிஷ்டானத்திற்கு உண்டு. 'மசூரகம், குட்டிமம்' என்ற பெயர்களும் பெறும். (மசூரகம் = ஜகதி)
அதிட்டான வகைகள்
கட்டட, சிற்பக் கலை நூல்கள் அதிஷ்டானம் கொண்டிருக்கும் பேருறுப்புகள், சிற்றுறுப்புகள், அவற்றின் அமைப்பு, அளவுகள் ஆகியவற்றைக் கொண்டு வெவ்வேறு வகை அதிஷ்டானங்களைக் கட்டட, சிற்ப நூல்கள் விவரிக்கின்றன.
- மயமதம் - 14 வகை
- காஸ்யபம் 23 வகை - பாதபந்தத்தின் கீழ் 8, பிரதிபந்தத்தின் கீழ் 15
- மானசாரம் - 64 வகை
பாதுகா', 'ஜன்மன்' என்பன உபானத்தின் மற்ற பெயர்கள்.
நன்றிக் கடன்
ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ்
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
வே. ராமன்; உபபீடமும் அதிட்டானமும்; கல்வெட்டு காலாண்டிதழ்; இதழ் 21; 10/1981
Thanks for the details sir!
ReplyDeleteSir Excellent compilation and a dedicated work. Am blessed to read your contents. A million thanks isn't enough.
ReplyDelete