Saturday, 10 September 2022

உபபீடம்

பிற்காலத்தில் கோயில் கட்டுமானங்கள் பெரியதாகவும் உயரமானதாகவும் ஆயின. அதற்கேற்ப
  • அடிப்பகுதியின் உயரத்தை அதிகரிக்கவும், 
  • வலிமையைப் பெருக்கவும், 
  • கலை அழகைக் கூட்டவும் 
அதிஷ்டானத்தின் கீழ் உபபீடம் என்னும் உறுப்பு சேர்க்கப்பட்டது. 

உபபீடம் கோயில் கட்டிடங்களின் இன்றியமையாத உறுப்பு அல்ல.  கோயில் கட்டுமானங்களை உபபீடம் இல்லாமலும் எழுப்பலாம்.

உபபீடத்தின் உறுப்புகள்

உபபீடம் அதிஷ்டானத்தைப் போன்ற அமைப்பு உடையது. 'குமுதம், ஜகதி' ஆகியவற்றைத் தவிர்த்து அதிஷ்டானத்தின் மற்ற உறுப்புகள், (உபானம், கண்டம், பட்டிகை, வாஜனம், பிரதி வரி, கபோதம்  என்ற பேருறுப்புகள் மற்றும் கம்பு, பத்மம் என்ற சிற்றுறுப்புகள்)  உபபீடத்தில் அமையும். 

அகன்ற கண்டம் உபபீட்த்தின் முக்கிய, மைய உறுப்பாக அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

உபபீடத்தின் வகைகள் 

உபபீடத்தில் இடம்பெறும் பேருறுப்புகள், சிற்றுருப்புகள், அவற்றின் அளவுகள் இவற்றைப் பொறுத்து வெவ்வேறு விதமான உபபீட வகைகளை சிற்ப நூல்கள் சொல்கின்றன. அவற்றின் உறுப்புகளையும், உறுப்புகளின் அளவுகளையும் விவரிக்கின்றன.
  • காஸ்யபம் - 8 வகை
  • மயமதம்  - 6 வகை
  • மானசாரம்  - 12 வகை
பல ஓரே வகையான உபபீடங்கள் மூன்று நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.

காஸ்யப நூலில் உள்ள உபபீட வகைகள் 

காஸ்யபத்தில் கீழ்கண்ட 8 வகை உபபீடங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
  1. மூவங்க (திரியங்க) உபபீடம் 
  2. ஐந்து அங்க (பஞ்சாங்க) உபபீடம் 
  3. ஆறு அங்க (ஷடாங்க) உபபீடம் 
  4. எட்டு அங்க (அஷ்டாங்க) உபபீடம் 
  5. பிரதிபத்ர உபபீடம் 
  6. பிரதிசுந்தர உபபீடம் 
  7. சௌபத்ர உபபீடம் 
  8. கல்யாண காரிகை உபபீடம் 

1. மூவங்க உபபீடம் (திரியங்க உபபீடம்)

மூன்று அடிப்படை உறுப்புகளைக் கொண்ட மிக எளிய உபபீடம்.

மூவங்க உபபீடம்


மூவங்க உபபீடம் 

சில எளிய கோயில்களில் மற்றும் மண்டபங்களில் (மேற்கண்ட படத்தில் கண்டவாறு) மூன்று அங்க உபபீடமே தாங்குதளமாக அமைவது உண்டு.

2. ஐந்து அங்க (பஞ்சாங்க) உப பீடம்
3. ஆறு அங்க (ஷடாங்க) உப பீடம்
4. எட்டு அங்க (அஷ்டாங்க) உப பீடம்
  • கண்டத்தின் மேலும் கீழும் கம்புகள் அமைந்தால் அது ஐந்து அங்க  உபபீடம் எனப்படும். 
  • இவற்றுடன் வாஜனத்தின் மேல் மேற் கம்பு அமைந்தால் ஆறு அங்க உபபீடம். 
  • கண்டத்தின் இரு கம்புகளுடன்  பத்மங்களும் இருந்தால் அது எட்டு அங்க உபபீடம்.


ஆறு அங்க உபபீடம் 

எட்டு அங்க உபபீடம்
திருவண்ணாமலை வடக்கு உள் கோபுரம்

5. பிரதிபத்ர உபபீடம் 

பத்ரம் - இலை
  • அஷ்டாங்க உபபீடத்தில் வாஜனத்திற்குப் பதிலாக கபோதமும் அதற்கு மேல் பிரதிவரியும் கொண்ட உபபீடம். (காண்க: பிரதிவரி)
பிரதிபத்ர உபபீடம் 
2. அதோ பத்மம்; 3. கம்பு; 5. கம்பு; 6. ஊர்த்துவ பத்மம் 
(5 உம், 6 உம் கபோதத்தின் அடியில் மறைந்துள்ளன)

6. பிரதிசுந்தர உபபீடம் 

பிரதிசுந்தர உபபீடம் பிரதிபத்ர உபபீடத்தைப் போன்றதே. முக்கிய வேறுபாடு என்னவெனில், கண்டத்திற்கு கீழ்  இரண்டாம் பிரதிவரி இருப்பதே. 

பிரதிசுந்தர உபபீடம்

7. சௌபத்ர உபபீடம் 

கண்டத்திற்கு மேல் கபோதமும், கண்டத்திற்கு கீழே பட்டிகையும்,  அமைந்த உபபீடம்.

சௌபத்ர உபபீடம் 
(கூறுகள் அடைப்பு குறிகளுக்குள். மொத்தம் 21 கூறுகள்)
அ - கம்பு, பத்மம்; ஆ - பத்மம், கம்பு; இ - கம்பு, பத்மம் (ஒவ்வொன்றும் 1/2 கூறு)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 
வளைகாப்பு மண்டபம் 

8. கல்யாண காரிகை 

கல்யாண காரிகை உபபீடம், சௌபத்ர உபபீடம் போன்ற  அமைப்பு உடையது. முதன்மையான வேறுபாடு - கபோதத்திற்கு பதில் பட்டிகை உள்ளது. அதாவது கீழே  ஒன்று,  மேலே ஒன்றாக இரு பட்டிகைகள். 

இவ்வகை உபபீடம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. (திருமதி. சௌந்தரி ராஜ்குமார்)

மயமதம் 

காஸ்யபத்தில் உள்ள 8 வகைகளில், மயமதம் முதல் இரண்டை விட்டுவிட்டு, மற்ற ஆறை மட்டும் இவ்வாறு வகைப்படுத்துகிறது.
  1. வேதிபத்ரம் - ஷடாங்கம், அஷ்டாங்கம் 
  2. பிரதிபத்ரம் - பிரதிபத்ரம், பிரதிசுந்தரம்
  3. சுபத்ரம் - சௌபத்ரம், கல்யாண காரிகை.
மானசாரம் 

மானசாரம்  உபபீடங்களில் 3 வகைகள், ஒவ்வொரு வகையிலும் 4 பிரிவுகள் என 12 வகையான உபபீடங்களை விவரிக்கிறது.

1. வேதிபத்ரம்

  • முதல் வகை - ஷடாங்கம். 
  • 2,3 ஆம் வகைகள் - அஷ்டாங்கம். 
  • நான்காம் வகை - கண்டத்தின் கீழே  மட்டும் பிரதிவரி அமைந்த ஒரே உபபீட வகை. 

    வேதிபத்ரம் - நான்காம் வகை 

2. பிரதிபத்ரம் 

மானசாரத்தின் பிரதிபத்ர வகைகள் உபபீடத்தின் மேல் அங்கமாக பிரதிவரியைக்  கொண்டவை.
  • முதல் வகை - காஸ்யப, மயமத பிரதிபத்ர வகையை ஒத்தது.
  • 2,3 4 ஆம் வகைகள் - பிரதிபத்ரத்தில் கண்டத்தின் கீழ் ஒரு பட்டிகை/ வஜ்ரகும்பம்/ ரத்ன பட்டிகை உடையது. 
பிரத்பத்ர உபபீடம் - இரண்டாம் வகை (மானசாரம்)

3. மஞ்சபத்ரம் 

நான்கு மஞ்சபத்ர வகைகளும் இரு கபோதங்களும், மேல் கபோதத்தின்  மீது பிரதிவரியும், கீழ் கபோதத்தின் கீழ் இரண்டாவது கண்டமும் கொண்டவை. 

மஞ்சபத்ரம் - இரண்டாம் வகை 

உதவி 

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

திருமதி. சவுந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021 -  சில படங்கள்; பல தகவல்கள்




1 comment:

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...