கோயிலின் விமானம், மண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றின் சுவர்கள் வெறுமையாக இல்லாமல் இருக்க அமைக்கப்படும் அழகுறுப்புகள் 'பஞ்சரங்கள்' எனப்படும். அவை பொதுவாக ஒரு நாசியை மேல் உறுப்பாகக் கொண்டவை.
வகைகள்
- கோட்ட பஞ்சரம்
- இரட்டைக் கால் பஞ்சரம்
- ஒற்றைக் கால் பஞ்சரம் (விருத்த ஸ்புடிதம்)
- கும்ப பஞ்சரம்
- கும்பலதா
- கபோத பஞ்சரம்
- நிஷ்கராந்த பஞ்சரம்
கோட்ட பஞ்சரம்
இரண்டு தூண்களின் மேல் அமையும் பஞ்சரம். கோட்டங்களின் இரு பக்கங்களில் உள்ள நகுல பாதங்கள் ஒரு தூண் இரண்டாக வெட்டப்பட்டதைப் போன்ற அமைப்பு உடையது. ஆனால் இரட்டைக் கால் பஞ்சரத்தின் தூண்கள் முழுத்தூண்கள் போன்றவை.
| இரட்டைக்கால் பஞ்சரங்கள் |
ஒற்றைக்கால் பஞ்சரம்
ஒரு தூணின் மீது அமைந்த பஞ்சரம்.
இது' விருத்த ஸ்புடிதம்' என்றும் அழைக்கப்படும். (விருத்தம் = வட்டம்; ஸ்புட் = ஒளி பெறச் செய்தல்). மறைந்து இருக்கும் அகாரையை அலங்கரித்து அதற்கு ஒளி கொடுக்கும் உறுப்பு. பழங்காலத்தில் இதன் உறுப்புகள் வட்டமாக அமைந்திருந்ததால் விருத்த ஸ்புடிதம் என்று அழைக்கப்பட்டது.
விருத்த ஸ்புடிதம்
![]() |
| விருத்த ஸ்புடிதம் முதலாம் பராந்தகனின் புஞ்சை நற்றுணையப்பர் கோயில் படம் நன்றி: இரா ச இராசவேலு |
விருத்த ஸ்புடிதம் பல்லவர் கால கோயில்களில் கணேச ரதத்தில் மட்டுமே காணப்படுகிறது. முற்கால சோழ பாண்டிய முத்தரையர் கால கோயில்களில் விருத்த ஸ்புடிதம் கிரீவத்திலும் தளங்களிலும் அமைந்தன. லிங்க உருவத்தை உருவகப்படுத்தும் உறுப்பாக விளங்கியது.
- ஆதித்த சோழன் திருப்பணிகளான தில்லைஸ்தானம், திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருப்பந்துருத்தியில் காணப்படுகிறது.
- பாண்டியர் கோயில்களில் இரண்டாம் வரகுண பாண்டியனின் திருப்பத்தூர் கோயிலில் இடம் பெற்றுள்ளது.
- முத்தரையர்களின் நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரமும் விருத்த ஸ்புடிதம் கொண்டுள்ளது.
பொதுவாக 10 ஆம் நூற்றண்டிற்குப் பிறகு விருத்தஸ்புடிதம் அரிதாகிவிட்டது. (ஆர் நடராஜன் TMVAS)
செவ்வக ஸ்புடிதம்
![]() |
| விருத்த ஸ்புடிதம் வலையங்குட்டை ரதம், மாமல்லபுரம் |
விருத்த ஸ்புடிதம் பிற்காலத்தில் பித்தியின் அலங்கார உறுப்பாக மாறியது. ஸ்தம்ப பஞ்சரம், கும்ப பஞ்சரம், கும்ப லதா என உருமாற்றம் பெற்றது. பத்மாசனம் (அஸ்வ பாதம்), கும்பம், வாய் (ஆஸ்யம்), தாடி, குடம், பலகை, பிரஸ்தரம், கர்ண கூடம், போன்ற அமைப்புகள் இதில் இடம் பெறலாயின. இதன் மேற் பகுதியில் பூரிமம், கூடம், தூங்கானை விமானம், சாலை விமானம், அல்லது சுக நாசி அமையலாயின. தூணின் உடல் பகுதியை வட்டமாக மட்டும் இன்றி சதுரம், எண்பட்டை, பத்திருப்பு ஆகவும் அமைக்கப்பட்டது.
ஸ்தம்ப பஞ்சரம் / ஒற்றைக்கால் பஞ்சரம்
கும்ப பஞ்சரம்
இது ஒற்றைத் தூண் பஞ்சரத்தைப் போன்றது. அடியில் கும்பம் எனும் குடத்தைக் கொண்டது.
கும்பலதா
கும்ப பஞ்சரத்தில் கும்பத்தின் பக்கத்தில் லதா என்ற கொடிக்கருக்கு அலங்காரத்தைஉடையது. 'கும்பலதா' .
உபானத்தில் இருந்து எழுந்து வரும் பஞ்சரங்கள் - 'கபோத பஞ்சரம்' மற்றும் 'நிஷ்கராந்த பஞ்சரம்'.
கூரை வரை இருந்தால் அது கபோத பஞ்சரம். பத்ரமாக வெளி நீட்டிக் கொண்டிருந்தால் அது நிஷ்கராந்த பஞ்சரம். இதை நிர்வ்யூக பஞ்சரம் என்றும் சொல்வார்கள். (திரு. சங்கரநாராயணன் ஜி)
| கபோத பஞ்சரம் (தாதாபுரம்) காலம் பொ.ஆ. 1006) (நன்றி: கடலூர் சீனு; கல்லில் எழுந்த காலம்; ஜெயமோகன் இணைய தளம்; 29/11/21) |
ராஜராஜனின் அக்கா குந்தவை எழுப்பிய தாதாபுரம் ரவிகுல மாணிக்கேசுவரர் கோயில் விமானத்தின் இந்த பஞ்சரம்தான் காணக்கிடைக்கும் ஒரே கபோத பஞ்சரம் என்கிறார் டாக்டர் ஜி சங்கரநாராயணன் அவர்கள். காமிகாகமம், சிம்ம பஞ்சரம், சார்த பஞ்சரம், பஞ்சரம், நிர்வியூக பஞ்சரம், லம்பநாசிகம், சிம்மச்ரோத்திரம், கண்டநிர்வியூககம், ஜசபஞ்சரம், கபோத பஞ்சரம் என்னும் ஒன்பது வகையான பஞ்சரங்களை விவரிப்பதாக அவர் கூறுகிறார்.
| நிஷ்கராந்த பஞ்சரம் (நன்றி: சு. சீதாராமன்; திருப்புள்ளமங்கை விமானம்: வரலாறு.காம் இணைய இதழ் எண் 147) |
மேற்கண்ட கபோத பஞ்சரத்தை நிஷ்கராந்த பஞ்சரம் என்றும் கபோதத்தில் முடியும் நிஷ்கராந்த பஞ்சரத்தை கபோத பஞ்சரம் என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.
| (நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்) |
![]() |
| படம் நன்றி: சிவசங்கர் பாபு |
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
சங்கரநாராயணன் ஜி; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
சங்கரநாராயணன் ஜி; தாதாபுரத்தின் கபோத பஞ்சரம்; Sarasvatam;
Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)
சிவசங்கர்பாபு TMVAS
நடராஜன் TMVAS
சிவசங்கர்பாபு TMVAS
நடராஜன் TMVAS



No comments:
Post a Comment