Saturday, 10 September 2022

கோட்ட பஞ்சரம்

கோட்ட பஞ்சரம்

கோயிலின் விமானம், மண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றின் சுவர்கள் வெறுமையாக இல்லாமல் இருக்க அமைக்கப்படும் அழகுறுப்புகள் 'பஞ்சரங்கள்' எனப்படும்.

'கோட்ட பஞ்சரம்' (கோஷ்ட பஞ்சரம்) இரண்டு தூண்களும், அவற்றின் மேல் அமையும் அழகணிகளும், இரண்டு தூண்களுக்கு இடையில் உள்ள உள்ளொடுங்கிய, மாடம் போன்ற 'கோட்டம்' என்ற பகுதியும் கொண்ட அமைப்பு. 

கோட்டங்களின் இருபுறத் தூண்கள் ஒரு தூணை இரண்டாகப் பிளந்தது போன்றவை. அவ்வாறு வெட்டி அவற்றின் இடையே அமைத்தது போன்ற அமைப்புடையது கோட்டம். இந்த கோட்டத் தூண்கள் 'நகுல பாதம்' எனப்படும். தமிழில் 'அணைவுத் தூண்கள்'. நகுல பாதம் தமிழகத்தில் மட்டும் காணப்படும் கலைக்கூறு ஆகும்.

கோட்ட பஞ்சரங்கள் விமானத்தின் தரைத் தளம், மேல் தளங்கள், கிரீவம்; அர்த்த மண்டபம், மற்ற மண்டபங்களின் பித்தி, கோபுரம் ஆகியவற்றில் அமையும். 

தெய்வங்களுக்கான் கோட்டங்கள் 'தேவ கோட்டம்' என்றும் அழைக்கப்படும்.

தேவகோட்டங்கள் மேற்பகுதியின் அமைப்பைப் பொருத்து இருவகைப்படும்:
  • தோரண அமைப்புடைய தேவகோட்டம்
  • சாலை அமைப்புடைய தேவ கோட்டம்
தோரண அமைப்புடைய தேவகோட்டங்கள் மேற்பகுதியில்  பத்ர, சித்திர, மகர ஆகிய மூவகைக தோரண அமைப்புகளில் ஒன்றை உடையன. (காண்க: தோரணம்)

தேவ கோட்டம்
(தோரணம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் செதுக்கப்படவில்லை)
எசாலம் (11 ஆம் நூற்றாண்டு)

12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தோரணத்திற்கு பதிலாக கபோதத்துடன் ஆன பிரஸ்தரம், கிரீவம், சிகரம், கலசங்கள் ஆகியவற்றை மேலே கொண்டு சாலை விமான அமைப்பாக கோட்ட பஞ்சரங்கள் அமைக்கப்பட்டன.

தேவ கோட்டம்
நெடுங்குணம்
விஜயநகர காலம்

தோரணம், பிற்கால சாலை அமைப்பின் கபோதக் கூடுகளின் நாசி ஆகியவற்றின் நடுவில் உள்ள காடம் என்னும் மையப் பகுதியில் குறுஞ்சிற்பங்கள் இடம் பெறுவதுண்டு.

தேவ கோட்டங்கள்
  • பொதுவாக விமானத்தின் தரைத்தளத்தில் மூன்றும், அர்த்த மண்டபத்தின் பித்தியில் இரண்டும் ஆக ஐந்து தேவ கோட்டங்கள் அமையும். இவை பஞ்ச கோஷ்டங்கள் எனப்படும்.
  • எந்த கோயிலானாலும் இரு அர்த்த மண்டப தேவகோட்டங்களில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் இருப்பர்.
  • கருவறையைச் சுற்றி உள்ள மூன்று தேவகோட்டங்களில் உள்ள இறைவர்கள்:
ஆலய இறைவன்தெற்குமேற்குவடக்கு
சிவன்தட்சிணாமூர்த்திவிஷ்ணு/ லிங்கோத்பவர்பிரம்மா
அம்மன்சாமுண்டி/ கௌமாரிவைஷ்ணவிபிராஹ்மி
விஷ்ணுநரசிம்மர்/ லக்ஷ்மிஸ்ரீனிவாசர்/ நாராயண மூர்த்திபரமபத மூர்த்தி/ நரசிம்மர்

  • தேவகோட்டங்களில் இறையுருவங்கள் பல்லவர் காலத்திலேயே நிறுவப்பட்டன. ஆனால் அவை திசை சார்ந்து முறைப்படுத்தப்படவில்லை. 
  • முற்கால சோழர்கள் காலத்தில்தான் சிவன் கோயில் தேவகோட்டங்கள் மேற்கண்டவாறு நெறிப்படுத்தப்பட்டன. இம்முறை இன்றுவரை பரவலாகத் தொடர்கிறது.
  • பாண்டியர்கள் மேற்கண்ட திசைகளில் கோட்டங்கள் அமைத்தாலும் அவற்றில் இறையுருவங்களை நிறுவவில்லை.
  • விஜயநகர-நாயக்கர் காலத்திலும் கோட்டங்களில் பொதுவாக இறையுருவங்களை நிறுவவில்லை. சில கோயில்களில் சிறு இறையுருவங்களை அமைத்துள்ளனர்.
விநாயகர், முருகன் கோயில்களில் சிவாலயம் போல அமைக்கலாம் அல்லது கீழ் கண்டவாறு:

ஆலய இறைவன்தெற்குமேற்குவடக்கு
விநாயகர்தக்ஷ்ண கணபதிவிஷ்ணு கணபதிபிரம்ம கணபதி
முருகன்சுப்பிரமணியர்ஸ்கந்தர்சிவன்

செம்பியன் மாதேவி கலைப் பாணி

கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி செம்பியன் மாதேவி கற்றளியாகப் புனரமைத்த, புதிதாக நிறுவிய கோயில்களில் தேவ கோட்டங்கள் அதிகப்படுத்தப்படுள்ளன. அவற்றில் ஐந்து தேவ கோஷ்டங்களுக்குப் பதிலாக 9 முதல் 16 தேவ கோஷ்டங்கள் வரை அமைந்துள்ளன. அதிகப்படியான தேவ கோஷ்டங்கள் அர்த்த மண்டபத்தின் இருபுறமும் (வடக்கு, தெற்கு) உள்ளன. 
  • வடக்கில் மேற்கில் இருந்து கிழக்காக: துர்க்கை, அர்த்தனாரீசுவரர், பிட்சாடனர், (கங்காதரர்)
  • தெற்கில் மேற்கில் இருந்து கிழக்காக: விநாயகர், நடராஜர், அகத்தியர், (ஆலிங்கன மூர்த்தி)
முருகன், காலசம்ஹாரர், வீணாதரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன. 


துணை

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

பொ. இராசேந்திரன். சொ,சாந்தலிங்கம்; கோயிற் கலை; NCBH; 5 ஆம் பதிப்பு; 2021



No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...