'பித்தி' கோயிலின் சுவர்ப் பகுதி ஆகும். 'பாத வர்க்கம்' என்றும் அழைக்கப்படும். பாதம் = தூண்.
பித்தி உறுப்புகள்
பித்தியை அழகூட்டுவதற்காகவும், வலு சேர்க்கவும் கீழ் கண்ட உறுப்புகள் சேர்க்கப்படுகின்றன.
- வேதி
- தூண்கள்
- பத்திகள்
- கோட்டங்கள்
- பஞ்சரங்கள்
வேதி
வேதிகை என்றும் அழைக்கப்படும். இது சுவரின் கீழ்ப்பகுதி. விவரங்களுக்கு காண்க வேதிகை.
தூண்கள்
சிறு, எளிய கோயில்களில் பித்தி வெறும் கற்களை அடுக்கிக் கட்டப்பட்டிருக்கும். மற்ற கோயில்களின் பித்தியில் தூண்கள் இருக்கும். இவை தனித்து இல்லாமல் பித்தியில் இருந்து வெளிநீட்டிக் கொண்டிருக்கும். பித்தியை ஒட்டி இருப்பதால் இவற்றிற்கு 'குட்ய ஸ்தம்பம்' எனப் பெயர். (குட்ய = சுவர்) இத்தூண்களின் அரைப் பகுதி மட்டுமே வெளியே தெரிவதால் இவை 'அரைத் தூண்கள்' என்றும் பெயர் கொள்கின்றன. தூண்கள் விமானத்தின் மேல் பாகங்களைத் தாங்கவும், சுவரின் வலிமைக்காகவும் துணை நிற்கின்றன.
பித்தித் தூண்கள் இரு வகை
- அதிஷ்டானத்தின் மேல் இருந்து உத்தரம் வரை அமையும் தூண் 'ஜஷால ஸ்தம்பம்' எனப்படும். இதுவே பொதுவாகக் காணப்படுவது.
- அதிஷ்டானத்தின் உபானத்தில் இருந்து உத்தரம் வரை அமையும் மற்றொரு வகைத் தூண் 'நிகாத ஸ்தம்பம்' அல்லது 'நிகாந்தரி' எனப்படும். இது அரிதாகக் காணப்படுவது.
| நிகாத ஸ்தம்பம் அல்லது நிகாந்தரி (நிகாத ஸ்தம்பங்களின் இரு பக்கங்களிலும் உள்ள தூண்கள் 'ஜஷால ஸ்தம்பங்கள். நடுவில் உள்ள கோட்டத்தின் இரு பக்கங்களிலும் உள்ள தூண்கள் நகுல ஸ்தம்பங்கள்) |
மற்ற வகைத் தூண்களைப் பற்றிய விவரங்களுக்கு காண்க: தூண்
பத்திகள்
பித்தியின் ஜஷால தூண்கள் இரண்டிரண்டாக அமைந்து பித்தியைப் பத்திகளாகப் பிரிக்கின்றன.
- 'பத்தி' என்பது இரு ஜஷாலத் தூண்களை பக்கங்களாகக் கொண்ட சுவரின் பகுதி ஆகும்.
- சுவரின் நடுப்பகுதியில் அமைந்த அகன்ற பத்தி 'சாலைப் பத்தி'.
- சுவரின் இரு பக்கங்களிலும் அமைந்த பத்திகள் 'கர்ண பத்திகள்'.
- சாலைப் பத்திக்கும் கர்ணப் பத்திகளுக்கும் இடையில் அமைபவை 'பஞ்சரப் பத்திகள்'.
- பத்திகளுக்கு இடையில் உள்ள சுவர்ப் பகுதிகள் 'அகாரை'.
.
| பத்திகள் 1 - சாலைப் பத்தி; 2, 3 - கர்ண பத்திகள்; 4,5 - அகாரை கொடும்பாளூர் மூவர் கோயில். |
| பஞ்சரப் பத்திகள் 1, 2 - பஞ்சரப் பத்திகள்; 3,4,5,6 - அகாரைகள் (படம் நன்றி: திருமதி சவுந்தரி ராஜ்குமார்) |
மேற்கண்ட கொடும்பாளூர் மூவர் கோயில் படத்தில் சாலைப் பத்தி மட்டும் வெளித்தள்ளி அமைந்துள்ளதைக் காண்க. அதனோடு ஒட்டிய அதிஷ்டானமும் அவ்வாறே வெளித்தள்ளிய பத்தியாய் உள்ளது. இத்தகைய பிதுக்கம் 'பத்ரம்' எனப்படும்.
பித்தி முழுவதும், அதாவது பத்திகள் மற்றும் அகாரைகள் 'பத்ரம்' என்னும் பிதுக்கம் இல்லாமல், மான சூத்திரம் என்னும் ஒரே மட்டத்தில் அமைந்து இருந்தால், அது 'சம பத்ரம்' எனப்படும்.
சாலைப்பத்தி மட்டுமின்றி கர்ணப் பத்திகளும் வெளித்தள்ளி இருக்கலாம்.
| பத்திகளும் அகாரையும் கூழமந்தல் |
இவ்வாறு பத்திகள் பத்ரமாக பிதுக்கம் கொண்டு இருக்கும்போது அவற்றின் இடையே இருக்கும் உள் ஒடுங்கிய அகாரைப் பகுதிகள் 'சலீலாந்தரம்' எனப்படும்.
சாலைப்பத்தி நான்கு ஜஷாலத் தூண்களைக் கொண்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். அதன் நடுப்பகுதி மற்ற இரு பக்கப் பகுதிகளைவிட வெளித்தள்ளி இருக்கலாம் . வெளித்தள்ளிய நடுப்பகுதி 'சுபத்ரம்'. இரு பக்கப் பகுதிகள் 'உப பத்ரம்'.
| சாலை பத்தியின் பிரிவுகள் இந்த சாலை பத்தியில் 4 தூண்கள். அவற்றுக்கிடையே 3 பத்திகள். 1 - சுபத்ரம்; 2.3 - உப பத்ரம் (படம் நன்றி: திருமதி சவுந்தரி ராஜ்குமார்) |
- சாலைப் பத்தி கர்ண பத்தியை விட அகலமானதாக இருக்கும்.
- கர்ண பத்தி பஞ்சர பத்தியைவிட அகலமானதாக இருக்கும்.
- பஞ்சர பத்தி கர்ண பத்திக்குச் சமமாக இருந்தால் அது 'பிரதி கர்ணம்' என்று அழைக்கப்படும்.
| பிரதி கர்ணம் (படம் நன்றி: திருமதி சவுந்தரி ராஜ்குமார்) |
பித்தி எண்ணிக்கை
முதல் தளமாகிய தரைத் தளத்தில் இரண்டு சுவர்கள் இருக்கலாம். அவ்வாறு இருந்தால்
- வெளிச்சுவர் 'பாஹ்ய பித்தி' எனப்படும்.
- உள் சுவர் 'அந்தர பித்தி' எனப்படும்.
- இரு சுவர்களுக்கு இடையே உள்ள சுற்றுப் பாதைக்கான இடைவெளி இடைவெளி 'அலிந்தம்' எனப்படும். (அலிந்தம் = சுற்றுப்பாதை)
- இவ்வகை விமானம் 'சாந்தர விமானம்' எனப்படும். (அந்தரம் = இடைவெளி. சாந்தரம் = ச+அந்தரம் = இடைவெளி உடையது)
| சாந்தரம் - நார்த்தாமலை |
| நிரந்தரம் |
சாந்தர வகைக் கோயில்களில் இருவகை உண்டு.
முதல் வகை - இரு சுவர்களும் ஒன்றாக கதலிகரண முறையில் இணைந்து ஒன்றாகி அதன் மேல் மேல் மேல் தளங்கள் அமைவது. இந்த திட்டத்தில் இரு சுவர்களும் சேர்ந்து விமானத்தின் மேல்பகுதியை தாங்குகின்றன. மேலுள்ள ஹாரம் அற்பிதமாகவே அமையும் (தளச் சுவருடன் ஒட்டி இருக்கும்). மேல் தளத்தைச் சுற்றி அலிந்தம் என்னும் சுற்றுப்பாதை அமைய வழி இல்லை. இவ்வகைக்கு எடுத்துக்காட்டுகள்: காஞ்சி கைலாசநாதர் கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் முதலியன.
இரண்டாம் வகை - வெளிச்சுவர் தரைத்தளத்தோடு முடிவடைந்து விடும். மேல் கட்டுமானத்தின் எடையைத் தாங்காது. இரு சுவர்களுக்கு இடையே உள்ள அலிந்தம் என்னும் சுற்றுப்பாதையின் கூரையை விசிறி வரிசையால் (கற்களை தாங்கு சுவர்களின் அளவிற்கேற்ப அகலத்தை வரையறை செய்து விதானத்தை மூடுவது) மூடப்படும். வெளிச்சுவர் மீது அனர்பித ஹாரம் (தள சுவரை விட்டு விலகிய ஹாரம்) அமையும். அந்தர பித்தி என்னும் உள் சுவர்தான் மேல் தளங்களைத் தாங்கும். ஹாரத்திற்கும் முதல் தள சுவருகும் இடையில் அலிந்தம் என்னும் சுற்றுப்பாதை அமையும். எடுத்துக்காட்டுகள்: நார்த்தாமலை, அஷ்டாங்க விமானங்கள் (மாமல்லபுர தர்மராஜ ரதம்,காஞ்சி வைகுண்டபெருமாள் கோயில், உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயில் முதலியன), உத்தரமேரூர் கைலாசநாதர் கோயில், முசிறி கொரங்கநாதர் கோயில்.
முதல் வகையை (இரட்டைச் சுவர்+ இடைவெளி+அதிக எடை தாங்கும் திறன்) மட்டுமே சாந்தர விமானமாக கொள்வோரும் உண்டு.
பித்தி - மேல் கீழ் பிரிப்பு
முதல் தளமான கீழ்த் தளம் உயரமாக அமையும் போது அழகு மற்றும் வலிமை கருதி அதன் பித்தியை மேல் கீழாக இரு பகுதிகளாக பிரிப்பது உண்டு. வெளியில் இருந்து இது இரு தளங்கள் போன்ற தோற்றத்தைத் தரும. ஆனால் , ஒரே தளம்தான். ஏனென்றால், கருவறை இரண்டு பகுதிகளையும் சேர்த்தே அமைந்துள்ளது. மேலும், கீழ்ப் பகுதியின் மேல் ஹாரம் இல்லை. இவ்வகை தளம் போன்ற மேற்பகுதி உபரி தளம் எனப்படும். இவ்வகை பிரிப்பு ஹொய்சாள கலையில் இவ்வகை அமைப்பின் மேற்பகுதி 'ஊர்த்துவ ஜங்கா'. கீழ்ப்பகுதி 'அதோ ஜங்கா' என்று அழைக்கப்படும். (ஊர்த்துவ = மேல்; அதோ = கீழ்; ஜங்கா=பித்தி).
| 1. உபரி தளம் (ஊர்த்துவ ஜங்கா); 2. கீழ் தளம் (அதோ ஜங்கா) தஞ்சாவூர் பெரிய கோயில் (gf, CC BY-SA 2.5 <https://creativecommons.org/licenses/by-sa/2.5>, via Wikimedia Commons} |
கோட்டங்கள்
விவரங்களுக்கு காண்க: கோட்ட பஞ்சரம்
பஞ்சரங்கள்
விவரங்களுக்கு காண்க: பஞ்சரங்கள்
துணை
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021 நன்றி: பல தகவல்களும் படங்களும்.
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3
Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)
சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I


No comments:
Post a Comment