Friday, 9 September 2022

கபோதம்

கபோதம் என்றால் புறா.  கபோதகம் என்றும் அழைக்கப்படும் இது ஒரு கூரை உறுப்பு.  பித்தியை மழை, வெய்யிலில் இருந்து காக்க உண்டான கொடுங்கை அமைப்பின் வழித்தோன்றலே கபோதம். வளைந்து கீழ் இறங்கும் முற்புறம் கொண்டது. 

கபோதத்திற்கு 'கோபனகா' என்றும் பெயர் உண்டு. கோபனா = பாதுகாப்பு. 

தமிழகக் கோயில்களில் காலத்தால் முற்பட்ட கபோத அமைப்பு விழுப்புரம் மாவட்டம் தளவானூரில் காணப்படுகிறது. அங்கு மகேந்திர வர்ம பல்லவன் (பொ. ஆ. 590-625) உண்டாக்கிய 'சத்ருமல்லேசுவரம்' என்னும் குடைவரையில்.

தளவானூர் சத்ருமல்லேசுவரம் குடைவரை

இந்த முதல் கபோதத்திலேயே 'நாசி' என்னும் கலைக்கூறு இடம்பெற்றுள்ளது சிறப்பு. நாசிகை, கூடு என்பன இதன் மற்ற பெயர்கள். நாசி என்றால் மூக்கு. லாட வடிவம் உடைய சிறு சாளரம் போன்ற அமைப்பு. 
  • அலங்கரிக்கப்பட்ட லாடப் பகுதி 'தோரணப்பட்டி'. 
  • அதன் உள் உள்ள குழிந்த பகுதி 'காடம்'. 
  • உச்சியில் கைப்பிடி போன்று உள்ளது 'சிகை'. 
இங்குள்ள ஐந்து நாசிகளுக்குள்ளும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ள கந்தர்வத் தலைகள் இடம் பெற்றுள்ளன.  ஒவ்வொன்றும் வேறுபட்ட தலை அலங்காரம், காதணிகள் கொண்டவை. 

நாசி; சத்ருமல்லேசுவரம், தளவானூர்

கற்றளிகளில் கபோதம் கூரையின் வெளிப்புற நீட்சியாகும். வலபி என்ற எழுதகம், பூமிதேசம் ஆகிய இரு கூரை உறுப்புகளுக்கு இடையில் அமைந்தது. எழுதகத்தில் விளையாடும் பூதகணங்களுக்கும், பூமிதேசத்தை அலங்கரிக்கும் யாளிகளுக்கும் இடையில் பிதுங்கி விழிக்கும் புறா! 

கூரை உறுப்புகள் - எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
1. வலபியில் பூத கணங்கள்
கபோதத்தில் 2. சந்திர மண்டலம்; 3. லதா மண்டலம் (கொடிக்கருக்கு); 4. அல்ப நாசிகை - தூணுக்கு நேராக அமைந்துல்லா லாட வடிவம்; 5. மனிதத் தலை
பூமி தேசத்தில் 6 யாளிகளின் வரிசை; 7 பூமிவரிசையின் முடிவில் யாளியின் திறந்த வாயில் வீரன்
படம்  நன்றி தமிழ் இணைய கல்விக் கழக வலைப்பக்கம்

கபோதத்தின் முற்பகுதி கீழ் விளிம்பில் இடம்பெறும் வட்டங்களின் வரிசை சந்திர மண்டலம் என்று பெயர் பெறும். 

கபோதத்தின் முற்பகுதி மூலைகளிலும் இடையிலும் அமையும் அலங்காரம் கொடிக்கருக்கு (லதா மண்டலம்) எனப்படும். கபோதத்தின் இரு கோடிகளில் உள்ளதற்கு   'கோடிப்பாளை' என்றும் கபோதத்தின் நடுவில் உள்ளதற்கு 'மையப் பாளை' என்றும் பெயர்.

கபோதத்தில் உள்ள நாசிகைகள் அல்ப நாசிகைகள் எனப்படும். சிகரத்தில் அமையும் பெரிய' மகா நாசிகை' யோடு ஒப்பிடுகையில் சிறியது என்ற பொருளில் இப்பெயர்.

கபோதத்தின் மூலைகளில் ஒட்டினாற்போல் அமையும் இரு அல்ப நாசிகைகள் 'நேத்ர நாசிகைகள்' எனப்படும்நேத்ரம் என்றால் கண். இரு நாசிகளும் இரு கண்கள் போல உள்ளதால் இப்பெயர். 

கபோதம்; நேத்ர நாசிகைகள்
படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம்

பொ. ஆ. 8 ஆம் நூற்றாண்டு முதலே நாசிகளின் 'சிகை' இல்  சிம்மங்கள் இடம்பெறலாயின. மேற்கண்ட எசாலம் கோயில் கபோதத்தில் சிம்ம முகப்புகள் உடைந்துள்ளன.

சிம்ம முகப்பு நேத்ர நாசிகள்
அம்மணி அம்மன் கோபுரம், திருவண்ணாமலை

கொடுங்கை

பிற்காலத்தில் கீழ் நோக்கிய கபோதங்களின் முனைகள் முன்னோக்கி விரியலாயின. 

நீண்ட கபோதம்
விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில், (வேலூர் அருகில்)

அவ்வாறு நீண்ட கபோதத்தைத் தாங்குவது போன்று அதன் கீழ்ப் பகுதியில் சட்டங்கள் தாங்குவது போன்ற 'கொடுங்கை' அமைப்பு உருவானது. மர வேலைப்பாடு போன்ற கலை  இதன் சிறப்பு. 'லுபகாரா' என்பது கொடுங்கையின் இன்னொரு பெயர்.

கொடுங்கைக் கபோதம்
விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில், (வேலூர் அருகில்)

கொடுங்கைக் கபோதம்
விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில், (வேலூர் அருகில்)

தமிழகத்தின் ஆகச் சிறந்த கபோதமாய் புதுக்கோட்டை அருகே உள்ள ஆவுடையார்கோயில் மண்டப கபோதம் கருதப்படுகிறது.

கொடுங்கைக் கபோதம், ஆவுடையார் கோயில் 

கொடுங்கை அமைப்பில் குறுக்குச் சட்டங்களும், நெடுக்குச் சட்டங்களும் உள்ள அமைப்பிற்கு 'சாத்யம்' என்று பெயர். அவை பிணையும் முறையைக் கொண்டு சாத்யம் 'ஸ்வஸ்திகம், நந்தியாவர்த்தம், வர்த்தமானம், சர்வதோபத்ரம்' என வகைப்படும். (இந்த நான்கு வகைகள் கோயில் கட்டுமானத்தில் கற்கள் அடுக்கப்படும் வகைகளையும் குறிக்கும்.)

தாங்குதளத்தில் கபோதம் - கபோதபந்த தாங்குதளம் 

தாங்குதளத்தின் மேல் பகுதியில் கபோதம் இடம்பெறலாம். தாங்குதளத்திற்கு கூரை போல. அது கபோதபந்தம் எனப்படும். பாதபந்தத் தாங்குதளங்களில் பட்டிகைக்கு பதிலாகவும் பிரதிபந்தத் தாங்குதளத்தில் பிரதிவரிக்குக் கீழேயும் கபோதம் அமையும்

பாதபந்த தாங்குதளத்தில் கபோதபந்தம்
பட்டிகைக்குப் பதிலாககக் கபோதம் 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜ கோபுரம் 


பிரதிபந்தத்தில் கபோதபந்தம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிளி கோபுரம்

உபபீடத்தில் கபோதம்

உபபீடத்தில் கபோதம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
வளைகாப்பு மண்டபம்

மற்ற இடங்களில்

விமானம் அல்லது கூரை உறுப்புகளின் ஒரு பகுதியாக கபோதம்  பல பாகங்களில் இடம் பெறும். உதாரணமாக
  • கோஷ்டத்தின் மேல்
  • ஹாரத்தின் அந்தர பிரஸ்தரத்தில்
  • தூண்களில்.


துணை

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ்  http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I

Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)


No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...