Friday, 9 September 2022

ஹாரம் (ஆரம்)

'ஹாரம் (ஆரம்) விமானத்தின் தலங்களின் மீது உள்ள அணி செய்யப்பட்ட பக்கச் சுவர் போன்ற அமைப்பு.  

ஹாரம் என்றால் பூமாலை, மணிவடம், முத்து மாலை என்ற பொருள்கள் உண்டு. ஹாரம் என்பது மாலை போன்ற அமைப்பு.
  • ஹாரத்தில் உள்ள 'கூடு' அல்லது 'கூடம்' எனப்படும் சிறு விமானங்கள் -  அதன் பூக்கள் அல்லது மணிகள். 
  • 'ஹாராந்தரம்' (ஆராந்தரம்) என்னும் கூடங்களுக்கு இடையே அமைந்து கூடங்களை இணைக்கும் உள்தள்ளிய சுவர் - வடம்.
அதன் பெயர் சுட்டுவதைப் போல ஹாரம் தளங்களை அழகு படுத்துகிறது.

கூடங்களின்  வகைகள்

ஹாரத்தின் கூடங்கள் மூவகை.
  1. கர்ண கூடம் 
  2. சாலை 
  3. பஞ்சரம் 
கர்ண கூடம்
  • 'கர்ண கூடு' என்றும் அழைக்கலாம். 
  • கர்ணம் என்றால் காது. ஒரு பக்கத்தின் இரு மூலைகளில் அமைவதால் இப்பெயர். 
  • பிரஸ்தரத்தின் மீது நான்கு மூலைகளிலும், மூலைக்கு ஒன்றாக நான்கு கர்ண கூடங்கள் அமையும். 
  • இவை பொதுவாக சதுர  நாகர  வகை (கூட) விமானமாக இருக்கும். ஒவ்வொரு கர்ண கூடமும் இரு பக்கங்களுக்குப் பொதுவானவை. ஒவ்வொரு பக்கத்திலும் இரு கர்ண கூடங்கள்  தெரிந்தாலும் நான்கு பக்கங்களுக்கும் சேர்த்து இருப்பது நான்கு கர்ண கூடங்கள்தான். இதனால் அவை சம பக்கங்களை உடையதாக அமைய வேண்டியது கட்டாயம்.
ஒவ்வொரு கர்ண கூடமும் இரு பக்கங்களுக்குப் பொதுவானது.

  • கர்ண கூடம் சில இடங்களில் வேசரமாகவும் உள்ளது. தாராசுரத்தில் திராவிடமாக உள்ளது. சாலை விமானமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவையும் மேற்கூறிய காரணத்தால் ஆயத்தமாக (நீள்வடிவமாக இருக்க இயலாது.

சாலை - ஒவ்வொரு பக்கத்திலும் நடுவில் அமையும் 'சாலை' (ஆயத்த நாகரம்) வகை விமானம். 

பஞ்சரம் - கர்ண கூடங்களுக்கும், சாலைகளுக்கும் இடையே அமைபவை . இவை கஜ பிருஷ்டத்தின் முன் பக்கத்தைப் போலவோ, கஜபிருஷ்டத்தின் பக்க பார்வையாகவோ அமையலாம். பஞ்சரம் இல்லாமலும் இருக்கலாம்.

தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் விமானம் 
(Airavateshwarar_Gopuram self, Public domain, via Wikimedia Commons2)

கீழே உள்ள மூன்றாம் தல ஹாரத்தில் நாகரமாய் உள்ள கர்ண கூடம், நான்காம் தல ஹாரத்தில் திராவிடமாயும், ஐதாம் தலத்திற்கு மேல் வேசரமாயும் உள்ளது. இது லிங்கத்தின் கீழே சதுரமான பிரம்ம பாகம், நடுவில் 8 பட்டை விஷ்ணு பாகம், மேலே வட்ட ருத்ர பாகத்தை நினைவுறுத்தும் சிவக் குறியீடாக உள்ளது. நான்காம் தல பஞ்சரம் பக்கவாட்டு கஜ பிருஷ்டமாய் உள்ளது.

கர்ண கூடங்கள் தரைத் தல பித்தியில் உள்ள கர்ண பத்திகளுக்கு மேலும், சாலைகள் சாலைப் பத்திகளுக்கு மேலும், பஞ்சரம் பஞ்சரப் பத்திகளுக்கு மேலும் அமையும்.

ஹாராந்தரம் 

கூடங்களுக்கு இடையே அமைந்து, அவற்றை இணைக்கும், உள்தள்ளிய சுவர் 'ஹாராந்தரம்'. (ஹார + அந்தரம்; ஹாரம் - மாலை; அந்தரம் - உள்; அதாவது, ஹாரத்தின் கூடங்களுக்கு இடையே உள்ள உள்தள்ளிய சுவர்). தமிழில் ஆரச் சுவர். ஹாராந்தரம் தரைதலத்தின் சாலாந்தரத்திற்கு ஒப்பானது.

ஹாரம்
மூவர் கோயில், கொடும்பாளூர்

ஹாரம் ஒரு பக்கம்
இவ்வாறே நான்கு பக்கங்களிலும் ஹாரம் அமைந்திருக்கும்.

  • ஹாராந்தரம் பித்தி, கபோதம் என்னும் இரு உறுப்புகளைப் பெற்றிருக்கும். 
  • ஹாராந்தரத்தின் கபோதத்தில் ஒற்றை அல்ப நாசி இருந்தால் அதன் கீழ் உள்ள கோட்டம் 'நாசி கோட்டம்' எனப்படும்.
  • ஹாராந்தரத்தின் கபோதத்தில் இரு அல்ப நாசிகள் இருந்தால் அவை 'நேத்ர நாசிகள்' எனப்படும். நேத்ரம் = கண். நேத்ர என்பது இரு, இரண்டு என்பதைக் குறிக்கும். நேத்ர நாசிகள் = இரட்டை நாசிகள். 'அல்ப' என்பது அளவையும், 'நேத்ர' என்பது எண்ணிக்கையையும் குறிக்கின்றன. நேத்ர நாசிகளின் கீழ் அமையும் இரட்டை கோட்டங்கள் 'நேத்ர கோட்டங்கள்' எனப்படும்.

நாசி கோஷ்டம்

நேத்ர நாசிகள்; நேத்ர கோட்டம்

ஹாரந்தரத்தில் நேத்ர நாசிகள், நேத்ர கோட்டங்கள் 

ஹாரமும் தலங்களும் 

ஹாரம் எந்தத் தலத்தின் மீது அமைத்திருக்கிறதோ, அந்தத் தலத்தின் பகுதியாகக் கருதப்படும். முதல் தலத்தின் மீது (இரண்டாவது தலத்தைச் சுற்றி) அமைந்திருக்கும் ஹாரம் முதல் தலத்தின் ஹாரமாகக் கருதப்படும்.

சில ஆரம்ப காலக் கோயில்களைத் தவிர, இறுதித் தலத்தின் மேல் இருக்கும் கிரீவத்தைச் சுற்றி ஹாரம் இருப்பதில்லை.. இதே காரணத்தால் ஒரு தல விமானத்திலும் ஹாரம் இருப்பதில்லை.

ஹாரமும் ஹர்மியமும் 

ஹர்மியம் (அரமியம்) என்பது ஹாரத்தின் உள்ளே உள்ள தலச்சுவர். இது 'கிரக பிண்டி' என்றும் அழைக்கப்படும். ஒரு தலத்தின் ஹாரம் அதன் மேல் தலத்தின் சுவரை, அதாவது, ஹர்மியத்தைச் சுற்றி இருக்கும். ஹாரத்துக்கும் ஹர்மியத்திற்கும் இடையே இடைவெளி உள்ளதா, இல்லையா என்பதை பொறுத்து ஹாரம் இரு வகைப்படும். 

அர்பிதம் - ஹாரம், ஹர்மியத்தோடு இடைவெளி இல்லாமல் ஒட்டி இருந்தால், அந்த அமைப்பு 'அர்பிதம்'. இதுவே அதிகமாகக் காணப்படும் வகை.

அனர்பிதம் - ஹாரம், ஹர்மியத்தோடு ஒட்டாமல் விலகி இடைவெளியோடு இருந்தால், அந்த அமைப்பு 'அனர்பிதம்'. இவ்வாறு ஹாரம் அனர்பிதமாக அமையும்போது ஹாரத்திற்கும் ஹர்மியத்திற்கும் இடையே உள்ள சுற்றுப் பாதை 'அலிந்தம்' எனப்படும்.

அனர்பித ஹாரம்.
அம்புக்குறி - சந்திர சாலா (நிலா முற்றம்) 

தரைத்தலத்தின் மீது அமையும் அனர்பித ஹாரம், விமானத்தின் முன் உள்ள மண்டபங்களின் மீதும் நீளலாம். அவ்வாறு நீளும்போது முதல் தலத்தின் முன்னால் உள்ள ஹாரத்தினால் சூழப்பட்ட, மண்டபங்களின் வானம் பார்த்த மேல் தரை 'சந்திர சாலா' அல்லது 'நிலா முற்றம்' எனப்படும்.

அனர்பித ஹாரம், மேல் தலங்களில் கருவறை அமையும்போது, அதைச் சுற்றி வர உதவுகின்றன. அவ்வாறு கருவறை இல்லாவிட்டாலும் அனர்பித ஹாரம் அமைவது உண்டு.

அனர்பித ஹாரம் சாந்தார வகை (இரு சுவர்) விமானங்களின் மேல் இருக்கும். அதுவும் அவ்வகை விமானங்களில் மேல் கட்டுமானம் வெளிச்சுவர்களின் மீது அமையாமல் உள் சுவர்களின் மீது மட்டும் அமையும் போது இருக்கும்

ஏற்றமும் நீட்சியும்

அனைத்து கூடங்களும் ஓரே உயரம் உடையனவாய் இருக்கலாம்.

ஒரே உயர கூடங்கள்

ஏறு சாலை - சாலை, கர்ண கூடம் மற்றும் பஞ்சரத்தை விட அதிக உயரம் உடையதாக 'ஏற்றம்' பெற்றிருந்தால் அது 'ஏறு சாலை' எனப்படும். இது 'ஊர்த்துவ சாலை' என்றும் அழைக்கப்படும்.

ஏறு சாலை
மூவர் கோயில், கொடும்பாளூர்

இறங்கு சாலை - சாலை, கர்ண கூடம் மற்றும் பஞ்சரத்தை விட குறைந்த உயரம் உடையதாக 'இறக்கம்' பெற்றிருந்தால் அது 'இறங்கு சாலை' எனப்படும்.

இறங்கு சாலை 
மாமல்லபுரம் 
பத்ரம் 

பத்ர சாலை - சாலை முன்னோக்கி நீட்சி பெற்றிருந்தால் அது 'பத்ர சாலை' எனப்படும்.(பத்ரம் = நீட்சி)

சாலை மூன்று பத்திகளாகப் பிரிந்து நடுப்பத்தி நீட்சி பெறும்போது, நடுப்பத்தி 'சுபத்ரம்', எனவும், பக்க பத்திகள் 'உப பத்ரம்' எனவும் அழைக்கப்படும். அத்தகைய சாலை 'சொறுவு சாலை' என்றும் அழைக்கப்படுகிறது.

சொறுவு சாலை
(இது ஏறு சாலையாகவும் உள்ளது)

கூடங்களின் எண்ணிக்கை

கர்ண கூடம் - மூலைக்கு ஒன்றாக நான்கு கர்ண கூடுகள்.

பஞ்சரம் - இருக்கலாம். இல்லாமலும் போகலாம். இருந்தால் கர்ண கூடம், சாலைகளுக்கு இடையே பக்கத்திற்கு இரண்டு. 

சாலை - பொதுவாக ஹாரத்தில் ஒரு பக்கத்தில் ஒரு சாலை அமைந்திருக்கும். சில விமானங்களில் இரண்டு அல்லது மூன்று சாலைகள் இருக்கலாம். மூன்று சாலைகள் இருக்கும்போது நடு சாலை 'முக சாலை' எனப்படும்.

1,2,3 - சாலைகள்; 1 - முக சாலை


இரண்டு சாலைகள்
இவ்வாறு முக சாலை இல்லாத விமானம் 'ஆபாச விமானம்' என்ற வகையில் சேரும் என்ற கருத்து உள்ளது 


பஞ்சரம் (தஞ்சாவூர்)

அங்க வகைகள்

கூடங்கள் 4 அங்கங்கள் அல்லது 6 அங்கங்கள் கொண்டவை

4 அங்க கூடம் 
  1. வேதி
  2. பித்தி
  3. சிகரம்
  4. ஸ்தூபி 
4 அங்க சாலை
கலசம் உடைந்துள்ளது.

4 அங்க கர்ண கூடம் 
மூவர் கோயில் 

6 அங்க கூடங்கள்
  1. வேதி
  2. பித்தி
  3. பிரஸ்தரம்
  4. கிரீவம்
  5. சிகரம்
  6. ஸ்தூபி 
6 அங்க கூடத்தின் பிரஸ்தரம் 'அந்தர பிரஸ்தரம்' எனப்படும். அந்தர பிரஸ்தரத்தில் அமையும் சிறு நாசிகைகள் 'ஷூத்ர நாசிகைகள்' எனப்படும். அனைத்து கூடங்களும் 6 அங்க கூடங்களாக அமையும் போது அந்தர பிரஸ்தரம் ஹாரம் முழுதும் தொடர்ச்சியாக அமையும்.

ஆறு அங்க சாலைக் கூடம்


ஆறு அங்க கர்ண கூடம்
நாகர விமானம்

மூவகை கூடங்களிலும்  தெய்வ உருவங்கள் குடி கொள்ளலாம்.

பார வாஹகா (விமானம் தாங்கிகள்)

இவர்கள் விமானத்தின் தலங்களை தாங்கி நிற்பது போன்ற சிற்பங்கள்.

விமானம் தாங்கி

கண்ட ஹர்மியம்

விமானத்தின் தரைத் தலத்தில் கருவறையைச் சுற்றி பித்தியில் வெளி நோக்கிய கூடுதல் கருவறைகள் இருப்பது கண்ட ஹர்மியம் எனப்படும்.

கண்ட ஹர்மியம் - பனைமலை

கண்ட ஹர்மியத்தின் மீது உள்ள கூடங்களுடன் சேர்ந்து கண்ட ஹர்மியம் ஒரு தனி விமானம் போன்ற தோற்றம் பெறுகிறது.

3 கண்ட ஹர்மியங்கள் - திருவதிகை
Ssriram mt, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons (modified)

சாலாஹாரம்

பல்லவர் கால விமனங்கள் பஞ்சரங்கள் இல்லாமல் ஒரு தலத்தில் பல சாலைகளை கொண்டுள்ளன. இத்தகைய சாலைகள் நிறைந்த விமானங்கள் சாலாஹாரம் எனப்படும்.

சாலாஹாரம் - திருவதிகை
Ssriram mt, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons (modified)

துணை

ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3

Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 


No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...