பகுதிகள்
- அலங்கரிக்கப்பட்ட லாடப் பகுதி 'தோரணப்பட்டி'.
- அதன் உள் உள்ள குழிந்த பகுதி 'காடம்'.
- உச்சியில் கைப்பிடி போன்று உள்ளது 'சிகை'.
| நாசி; சத்ருமல்லேசுவரம், தளவானூர் |
மேலே உள்ள பிடி போன்ற சிகை பல்லவர், பாண்டியர் காலத்தில் பொ. ஆ. 9 ஆம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது. அதற்கு 'சக்தி த்வஜம்' என்று பெயர்$. அதன் பின் பொ. ஆ. 8 ஆம் நூற்றாண்டு முதல் 'கீர்த்திமுகம்' என்னும் சிங்கமுகச் சிகை அமையலாயிற்று. பாண்டியர் கோயில்களில் கழுகும் சிகையில் இடம் பெற்றுள்ளது.
பல்லவர் காலத்தில் லாட வடிவில் இருந்த காடம் பிற்கால சோழர் கோயில்களில் வட்டமாக மாறியது.
நாசிகளின் வகைகள்
நாசிகளின் அளவு, அமைவிடம் ஆகியவ்ற்றின் அடிப்படையில் நாசிகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படும்.
- அல்ப நாசி
- ஷூத்ர நாசி
- பால நாசி
- மகா நாசி
- அனு நாசி
- லலாட நாசி/ குஷி நாசி
- சுக நாசி
- வம்ச நாசி
எண்ணிக்கையின் அடிப்படையில் இரட்டை நாசிகள் 'நேத்ர நாசிகள்' எனப்படும்.
அல்ப நாசி
தமிழகக் கோயில்களில் காலத்தால் முற்பட்ட கபோத அமைப்பு விழுப்புரம் மாவட்டம் தளவானூரில் காணப்படுகிறது. அங்கு மகேந்திர வர்ம பல்லவன் (பொ. ஆ. 590-625) உண்டாக்கிய 'சத்ருமல்லேசுவரம்' என்னும் குடைவரையில்.
![]() |
| தளவானூர் சத்ருமல்லேசுவரம் குடைவரை |
இந்த முதல் கபோதத்திலேயே நாசிகள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள ஐந்து நாசிகளுக்குள்ளும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ள கந்தர்வத் தலைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் வேறுபட்ட தலை அலங்காரம், காதணிகள் கொண்டவை.
இவ்வாறு பிரஸ்தரத்தில் உள்ள கபோதத்தில் உள்ள நாசிகைகள் அல்ப நாசிகைகள் எனப்படும். சிகரத்தில் அமையும் பெரிய' மகா நாசிகை' யோடு ஒப்பிடுகையில் சிறியது என்ற பொருளில் இப்பெயர்.
அல்ப நாசிகள் கீழ்கண்ட இடங்களில் அமையும்
- பிரஸ்தரத்தின் கபோதம்
- கபோதபந்த தாங்குதளத்தின் கபோதம்
- ஹாரத்தின் கர்ணகூடு, பஞ்சரம், ஹாராந்தரம் ஆகியவற்றின் சிகரம்/ மேல் பகுதியில்.
ஒட்டினாற்போல் அமையும் இரட்டை நாசிகைகள் 'நேத்ர நாசிகைகள்' எனப்படும். நேத்ரம் என்றால் கண். இரு நாசிகளும் இரட்டையாக இரு கண்கள் போல உள்ளதால் இப்பெயர்.
இந்த நாசிகள் அளவு, அமைவிடத்தால் அல்ப நாசிகள். எண்ணிக்கையால் நேத்ர நாசிகள். அதாவது நேத்ர வகை அல்ப நாசிகள்.
![]() |
| சிம்ம சிகை நேத்ர நாசிகள் அம்மணி அம்மன் கோபுரம், திருவண்ணாமலை |
பால நாசி
சாலையின் சிகரத்தின் முகப்பில் மகா நாசி போன்று அமையும் நாசி 'பால நாசி' எனப்படும். இது மகா நாசியை விடச் சிறியதாகவும், அல்ப நாசியை விடப் பெரியதாகவும் இருக்கும்.
| அல்ப நாசியும் பால நாசியும் |
ஷூத்ர நாசி
ஆறு அங்க ஹார கூடங்களின் பிரஸ்தரம் 'அந்தர பிரஸ்தரம்' எனப்படும். அந்தர பிரஸ்தரத்தின் கபோதத்தில் இருக்கும் நாசிகள் அல்ப நாசிகளை விடச் சிறியவை. அவை 'ஷூத்ர நாசிகள்' எனப்படும்.
| ஷூத்ர நாசி - கூழமந்தல் |
மகா நாசி
சிகரத்தின் பக்கங்களில் உள்ள பெரிய நாசிகள் 'மகா நாசி'கள் எனப்படும். இவை கிரீவ கோஷ்டங்களுக்கு மேல் அவற்றோடு இயைந்து காணப்படும்.
மகா நாசி மற்றும் பால நாசி இன் காடத்தில் சிறு 4 அல்லது 6 அங்க விமானம் செதுக்கப்பட்டிருக்கும். அது 'ஷூத்ர விமானம்' என்று அழைக்கப்படும். திசைக்குரிய தெய்வங்களும் இருக்கலாம். இவை எதுவும் இன்றியும் இருக்கலாம்.
| மகா நாசி வகைகள் கொடும்பாளூர் மூவர் கோயில் (ஷூத்ர விமானம்), எசாலம் (இறை உருவம்) தஞ்சை பெரிய கோயில் |
அனு நாசி
சிகரத்தில் மகா நாசியின் இருபுறமும் ஒவ்வொரு சிறிய நாசி அமையலாம். அவை அளவைப் பொறுத்து 'அல்ப நாசி'களாக இருக்கலாம். அதை விடப் பெரியவை 'அனு நாசி' என்று அழைக்கப்படும்.
கீர்த்தி முகம் தொன்மம்
| அனு நாசி |
லலாட நாசி/ குஷி நாசி
சாலை விமானத்தின் சிகரத்தில் இருபுறமும் இருக்கும் பெரிய நாசிகள், 'லலாட நாசி' எனப்படும். லலாடம் என்றால் நெற்றி. குக்ஷி நாசி எனவும் இதை அழைக்கின்றனர்.
- இவை கோயில் கோபுரத்தின் சிகரத்திலும் இருக்கும்.
- கஜபிருஷ்ட விமான சிகரத்தின் முகப்பிலும் காணப்படும்.
| லலாட நாசி |
வம்ச நாசி
'வம்ச நாசி' என்று ஒரு வகை நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. அது என்ன என்று தெரியவில்லை.
சுக நாசி
கிளி மூக்கு போன்ற நாசி. (சுகம் = கிளி). விமானத்தின் தரைத்தலத்தின் மேலிருந்து அர்த்த மண்டபத்தின் மேல் நீள்வது
| சுக நாசி |
காடச் சிற்பங்கள்
நாசியின் நடுப்பகுதியான காடத்தில் சிற்பங்கள் அமைவது மரபு.
பல்லவர் காலத்தில் நாசிகளில் கந்தர்வர் மற்றும் காளை முக சிற்பங்கள் அமைந்தன.
![]() |
| காடத்தில் கந்தர்வன் தலை தளவானூர் சத்ருமல்லேஸ்வரம் |
![]() |
| காடத்தில் காளைத் தலை மாமல்லபுரம் வலையங்குட்டை ரதம் |
நாசிகளின் காடங்களில் பிற்காலத்தில் இறைவன், புராண உருவங்கள், புராண நிகழ்வுகள், கோயில் வடிவங்கள் ஆகிய பலவகைச் சிற்பங்கள் இடம் பெறத் தொடங்கின.
கீர்த்தி முகம் தொன்மம்
கீர்த்தி முகத் தொன்மம், தலை கோயில் சிலை ஆன கதை. இது கந்த புராணத்திலும் சிவ புராணத்தின் ருத்ர சம்ஹிதையின் யுத்த காண்டத்திலும் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அசுரர் குல மன்னன் மிகுந்த பலமுடையவனாகத் திகழ்ந்தான். ஆணவம் தலைக்கேறி உமையை அடைய விரும்பினான். ராகுவை தன் தூதனாக சிவனிடம் அனுப்பினான். கோபமுற்ற சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து இடி போன்ற பேரோசையோடு சிங்க முகம், துழாவும் நாக்கு, நெருப்பு உமிழும் கண்கள், குத்திட்டு நிற்கும் முடி, கரடுமுரடான் உடலுடன் திருமாலின் நரசிம்ம அவதாரம் போன்ற ஒரு ஆற்றல் வாய்ந்த, கொடும் பசி கொண்ட பூதகணம் ஒன்று வெளிவந்தது. பயந்து ஓடிய ராகுவை அந்த பூத கணம் பிடித்துத் தின்ன முற்பட்டது. ராகு சிவனிடம் சரணடைந்தான். சிவன் அவனை மன்னித்து விட்டு விட்டார். பசி கொண்ட பூத கணம் “இனி நான் யாரை உண்ணுவேன்” எனக் கேட்க, இறைவன் “உன்னையே உண்பாயாக” எனப் பணித்தார். பூதகணம் தன் பாதம் முதல் கழுத்துவரை உள்ள உடல் பாகங்கள் அனைத்தையும் உண்டு தீர்த்தது. இனி உண்பதற்கு ஏதும் இல்லாத நிலையில் அதன் அர்ப்பணிப்பை மெச்சி, எஞ்சிய ஒளி பொருந்திய முகத்திற்கு கீர்த்தி முகம் என பெயரிட்டார். கோயில்களின் மேல் அது அமைய வரம் அளித்தார். மேலும் என்னை வழிபடுவோர் உன்னையும் வழிபடுவர், அவ்வாறு உன்னை வழிபடாதவர்களுக்கு என்னை வழிபட்டதன் பலன் கிடைக்காது என்றார்.
அவ்வாறே கீர்த்திமுகம் நாசிகள், தோரணங்கள் ஆகியவற்றின் தலைப்பில் அமைகிறது. சிங்க முகம், , காளையின் கொம்புகள், நெறித்த புருவம், விரிந்து பிதுங்கிய கண்கள், திறந்த கோரைப் பற்களுடன் கூடிய வாய் ஆகியவற்றுடன் காணப்படுகிறது.
துணை
$ சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3
Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)
https://aanmeegam.org/spiritual/kirtimukha/ - கீர்த்தி முகம் தொன்மம்.




No comments:
Post a Comment