Friday, 9 September 2022

திருநாவுக்கரசர் பாடிய கோயில் வகைகள்

 திருநாவுக்கரசர் பாடிய கோயில் வகைகள்


பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
    கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
    இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
    தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே

 - திருநாவுக்கரசர் தேவாரம் 06.071.05


கரக்கோயில்

கரகம் என்றால் தேர். கரக்கோயில் தேர் வடிவில் அமைந்த கோயில். மேலக்கடம்பூரில் உள்ள கோயிலே தமிழகத்தில் உள்ள ஓரே கரக்கோயில்.

மேலக்கடம்பூர்
(நன்றி: கடலூர் சீனு; ஜெயமோகன்.இன் வலைத்தளம்)

’தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்' என்று திருநாவுக்கரசர் வேறு ஒரு பதிகத்தில் பாடியுள்ளதால் 6 ஆம் நூற்றாண்டிலேயே இங்கு ஒரு கரக்கோயில் செங்கல் தளியாக இருந்துள்ளது என்பது தெளிவு. அது முதலாம் குலோத்துங்கனின் 43 ஆவது ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 1113) இந்த கற்றளியாகப் புனரமைக்கப்பட்டது (கல்வெட்டுச் செய்தி). முதல் தளம் நாகரமாகவும் இரண்டாம் தளம் 8 பட்டை திராவிடமாகவும், கிரீவமும், சிகரமும் வேசரமாகவும் உள்ளது. 

கருவறை நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி இரு குதிரைகள் இழுக்கும் தேர் போன்று வடிவமைக்கப்பட்டது. வடமொழியில் இது விஜயம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஞாழக்கோயில்

மணங்கமழும் சோலைகள் சூழ்ந்த இடத்தில்  ('கடி பொழில் சூழ்') அமைந்த கோயிலகள் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார். இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
  • இவ்வகை கோவில்கள் அடர்ந்த காடுகளில் கட்டப்பட்டன. 
  • இது வனங்களில் அமைந்த ஐயனார் போன்ற நாட்டார் தெய்வக் கோயில்களைக் குறிக்கும்.
  • இவை மர நிழலில் அமைந்த தெய்வங்கள்.
  • இவை மரத்தில் எழுந்தருளிய கடவுளுக்காக எழுப்பப்பட்ட கோயில்
திருப்பாதிப் புலியூர் கோயில் முற்காலத்தில் ஞாழற் கோயிலாக இருந்தது என ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. . 

ஞாழக்கோயில்

கொகுடிக்கோயில்

'கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில் என்ற வரிகள் மூலம் திருகருப்பறியலூரில் உள்ள கோயில் கொகுடிக்க் கோயில் என்பது தெரிகிறது.

கொகுடிக்கோயில் = திருகருப்பறியலூர்

இளங்கோயில்

இரு கருத்துகள் உள்ளன.
  • ஆறு அங்கங்களுக்கு குறைவாக உள்ள கோயில்கள். எடுத்துக்காட்டாக, மாமல்லபுரத்தில் உள்ள நான்கு அங்க திரௌபதி ரதம். திருச்சானூரில் இளங்கோயில் இருந்ததாக கல்வெட்டுத் தகவல்.
  • பழைய கோயிலை சீரமைக்கும்போது அருகில் ஒரு சிறு கோவில் கட்டி அதில் இறைவனை எழுந்தருளச் செய்வர். இந்த தற்காலிக சிறு கோவில்கள் 'பாலாலயம்' எனப்படும்.  இதுவே இளங்கோயில் என்பது மற்றொரு கருத்து.
மணிக்கோயில்

ஆறு / எட்டு பட்டை விமானம், அதாவது திராவிட விமானம், மணிக்கோயில் எனப்படும்.

ஆலக்கோயில்

இது ஆனைக் கோயிலின் மரூஉ எனக்கொண்டு தூங்கானை விமானத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆல் என்னும் சொல்லுக்கு நீர், வெள்ளம் என்ற பொருட்கள் உண்டு. நீர்நிலைகளுக்கு அருகில் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் அமைந்தவை தூங்கானை விமானங்கள், என்வே இப்பெயர் என்றும் கருதப்படுகிறது.

தஞ்சை வலிவலம், திருப்புகழூர் போன்ற நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள கோயில் ஆலக்கோயில். என்ற கருத்தும் உள்ளது. ஆனால் இது கோயில் வகையைக் குறிக்காது.

திருகச்சூர் போன்ற ஆலமரத்தைச் சார்ந்த கோயில்கள் ஆலக் கோயில்கள் என்பவரும் உண்டு.

மாடக்கோயில்

கோச்செங்கட் சோழன் திருமங்கை ஆழ்வாராலும், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார் ஆகியோரால் பாடப்பெற்றவர். அவர்கள் காலத்துக்கு முற்பட்டவர். 63 நாய்ன்மார்களில் ஒருவர். 6 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர். இவர் 70 க்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டினார். அவற்றில் பெரும்பாலானவை சிவனுக்கும் சில பெருமாளுக்கும் உரியவை. மாடக்கோயில்ளை இவர் கட்டியதாக நம்பப்படுகிறது.

மாடக்கோயில் 

கிழே ஒரு வெற்றுத் தளத்தை அமைத்து அதன் மீது அமையும் கோயில் மாடக்கோயில் ஆகும். எல்லா மாடக்கோயில்களும் சுயம்பு லிங்கமும் சதுர ஆவுடையாரும் கொண்டவை.

மாடக்கோயில் - கீழ்வேளூர்


துணை

சுரேந்திரன் Dr; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
























துணை









No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...