Friday, 9 September 2022

பிரஸ்தரம்

பிரஸ்தரம் என்றால் மறைத்தல், மூடுதல் என்று பொருள். 'விதானம், விடாணம், மத்தவாரணம், கோபானம், பிரச்சாதனம்' என்பன இதன் மற்றப் பெயர்கள். இதன் உறுப்புகளான கபோதகம், வலபி, லுபம் ஆகியவற்றின் பெயர்களையும் பெறும்.

பிரஸ்தர உறுப்புகள்

பிரஸ்தர உறுப்புகள் கீழிருந்து மேலே
  1. உத்தரத் தோகுதி
  2. கபோதம்
  3. வியாளம்
இவற்றின் துணை உறுப்புகள் கீழிருந்து மேலே

1. உத்தரம் (உத்தரத் தொகுதி) 
  • உத்தரம்
  • கம்பு/ வாஜனம்
  • வலபி/ எழுதகம் / பூத மாலை/ பூதமாலோநதம்
  • வாஜனம்
2. கபோதம்

3.வியாளம்
  • ஆலிங்கம்
  • அந்தரி
  • பிரதி
  • வாஜனம்

கபோதம் - உறுப்புகள் 

உத்தரத் தொகுதி 

உத்தரம், வாஜனம், வலபி, வாஜனம் உள்ளிட்டது உத்தரத் தொகுதி  

உத்தரம் - உறுப்புகள் 
(போதிகை - வெட்டுப் போதிகை; வலபி - பத்ம வலபி)
( நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

உத்தரத் தொகுதி இரு இடங்களில் அமையும்.
  • பித்தியின் மீது 
  • மண்டபங்களின் உள்ளே தூண்கள் மீதுள்ள போதிகைகளின் மேல்.
இரு வாஜனங்களும் கம்பு போன்ற மெல்லிய பட்டை போன்ற சிறிய உறுப்புகள்.

உத்தரம் 

உத்தரம் என்றால் தூக்கிப் பிடித்தல் என்று பொருள்.  உத்தரம் உத்தரத் தொகுதி மற்றும் பிரஸ்தரத்தின் முதல் உறுப்பு. இது மான சூத்திரத்தில் பொருந்தி இருக்கும். உத்தரமும், வலபியும்,  அவற்றின் இடைப்பட்ட வாஜனத்தை விட 2 -3 மடங்கு அகலமானவை.

அதன் மீது அமையும் அணியைப் பொறுத்து உத்தரம் மூவகைப்படும்.
  • கண்டோத்தரம்  - அணிகளற்ற வெறுமையான முகப்பு கொண்ட உத்திரம்.
  • பத்ர பந்தம் - பத்ரம் = இலை. இலைக்கருக்கு அணி. 
  • ரூபோத்தரம் - நடனப் பெண்கள், புராணக் கதைகள் முதலிய சிற்பங்கள் உடையது.
வலபி 

'எழுதகம்' என்னும் நாமமும் உண்டு. வலபி என்பதற்கு மேல் நோக்கிய தாமரை என்பது பொருள். வலபி  உத்திரம் போல அகலமானது.  

வலபியில்  பூதங்கள், அன்னங்கள் (ஹம்சம்), புறாக்கள், ஆகியவற்றின் வரிசைகளை அமைக்கலாம். அதைக் கொண்டு வலபி பெயர் பெறும் - பூத வலபி, ஹம்ச வலபி, பத்ம வலபி முதலியன. 

பூத வரி அமைவதால் 'பூத மாலை'/ 'பூதமாலோநதம்' என்றும் வலபி பெயர் பெறும். இந்த பூதங்கள் செய்யும் செயல்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறையைக் காட்டுபவையாக சில இடங்களில் அமைந்திருக்கின்றன (திருச்சி அல்லூர்). பஞ்சதந்திரக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. 

வலபி - பூதவரி

சோழர் காலம் வரை வலபியில் பூத வரி இடம் பெற்றிருந்தது. 13 ஆம் நூற்றாண்டு முதல் பூதவரிக்கு பதிலாக பத்மம், மதலை இடம்பெறத் தொடங்கின.

பத்ம வலபி 
சிங்கவரம் ரங்கநாதர் கோயில்

வலபி - மதலை
(நன்றி - திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

கபோதம்

கபோதம் பிரஸ்தரம் மட்டுமின்றி அதிஷ்டானம், உபபீடம் ஆகிய அமைப்புகளிலும் இடம் பெறுவதால் அது தனியாக விளக்கப்பட்டிருக்கிறது. காண்க: கபோதம்.

வியாளம் 

'பூமி தேசம்' என்பது இதன் மாற்றுப் பெயர். இது பிரதிபந்த உபபீடம், பிரதிபந்த தாங்குதளம் ஆகியவற்றில் உள்ள பிரதியைப் போன்றதே. ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம் ஆகிய நான்கு உறுப்புகளின் தொகுதி. யாளி, சிம்மம், யானை ஆகியவவை வரிசையாக இதன் மீது அமையும். வியாழங்கள் (யாளிகள்) வரிசையாக அமைவதால் வியாளம் என்று பெயர். பிரதி வரியின் கோடியில் மகர துண்டம் (மகரத்தின் பிளந்த வாயில் வீர்கள் இருப்பது போன்ற அமைப்பு) இடம் பெறும்.

மேலும் அறிய காண்க: பிரதிவரி

வியாழமே பிரஸ்தரத்தின் மேல் உறுப்பு. அது தளத்தின் முடிவையும் குறிக்கிறது.

கருவறையின் மேல் கூரை 

கருவறையின் மேலே மேல் கூரை இருவகைப்படும். 
  • நாபிசந்தம் - நடுவில் சிறு துளையுடன் மூடப்பட்ட கூரை. (நாபி - துளை; சந்தம் - மூடுதல்)
  • கதலிகா கரணம் - திறந்த கூரை. கருவறையின் கூரை திறந்திருக்க விமானத்தின் மேல் பகுதி படிப்படியாக குறுகி கண்டம் சிகரத்தால் மூடப்படுவது. இது தரைத் தல சுவர்மேல் அமைந்துள்ள விமானத்தின் உள்கூட்டைக் குறிக்கும். கதலி என்பது வாழை. வாழைக்குலையைப் போன்ற தோற்றம் உடையது.
கருவறையின் நாபிசந்த கூரை கீழ்கண்டவாறு தென்படும்.

கூரை உள்புறம் 

கதலிகா கரணம் கீழ்கண்டவாறு இருக்கும்.

கதலிகா கரணம்
இடையார்பாக்கம் தூங்கானைமாடக் கோயில்

துணை

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ்  http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3















No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...