Friday, 9 September 2022

செம்பியன் மாதேவி கலைக்கோயில்கள்

செம்பியன் மாதேவி வாழ்க்கை குறிப்பு

செம்பியன் மாதேவி செப்புப் படிமம்
(படம்: Freer Gallery of Art, Washington DC, USA, Public domain, via Wikimedia Commons)

செம்பியன் மாதேவி (பொ.ஆ 910 – 1001) கண்டராத்த சோழனின் (ஆட்சி காலம் பொ. ஆ 950-955) பட்டத்தரசி ஆவார். மழவர் குடும்பத்தில் பிறந்தவர். கண்டராதித்தர் கல்வெட்டுகளில் சிவஞான கண்டராதித்தர் என்று அழைக்கப்படும் சிறந்த சிவபக்தர். கணவர் மறைவுக்கு பின்னர் அரிஞ்சயன், சுந்தர சோழன், தன் மகன் மதுராந்தகன், முதலாம் ராஜராஜன் ஆகிய நான்கு மன்னர்களின் ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர். 

முதலாம்  பராந்தகனின் 34 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 941), கண்டாராதித்தரின் தேவியாக வரலாற்றில் அறிமுகமாகிறார்.  'கண்டாராதித்தர் தேவியார் மழபெருமான் மகளார் பிராந்தகன் மாதேவடிகளார் திருக்கற்குடி மகாதேவர்க்கு சந்திராதித்தர் உள்ளவரை திருவிளக்கு ஒன்றுக்கு 90 ஆடுகள்' நிவந்தம் தருகிறார்.

இவரது கடைசிக் கல்வெட்டு சாசனம் கி.பி.1001 திருவக்கரை கோவிலை கற்றளியாக்கியது - 60 ஆண்டு கால வரலாறு உடைய தேவி.



தன் கணவரைப் போலவே சிவபக்தரான செம்பியன் மாதேவி செங்கல் தளிகளைக் கற்றளிகளாக புனரமைத்தும்,  புதிதாக கோயில்களை நிர்மாணித்தும் தொண்டாற்றினார். முன்பு இருந்த கல்வெட்டுச் சாசனங்களை படியெடுத்து மீண்டும் புதிதாகக் கட்டியக் கோவிலில் பொறித்தார். அவர் இவ்வாறு திருப்பணி ஆற்றிய கோயில்கள்:
  1. திருநல்லம் (கோனேரிராஜபுரம்) - உமாமகேசுவரர் கோவில் ( கி.பி.974) 
  2. ஆநாங்கூர் (ஆதாங்கூர்) - திருகத்தீஸ்வர் கோவில் (கி.பி. 980)
  3. திருக்கோடிக்கா (திருக்கோடிக்காவல்) -  (கி.பி. 981)
  4. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) - (கி.பி. 982)
  5. செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலம் (செம்பியன் மாதேவி) கைலாசநாதர் கோயில் - (கி.பி. 985)
  6. தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை) - (கி.பி. 986)
  7. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்) - (கி.பி. 987-92)
  8. திருமணஞ்சேரி - (கி.பி. 987)
  9. திருத்துருத்தி (குத்தாலம்) - (கி.பி. 992)
  10. திருவக்கரை - (கி.பி. 1001)
மேற்கண்ட கோயில்கள் செபியன் மாதேவியின் கலைமுத்திரை பதிந்த கற்றளிகளாகும். மேலும் பல கோயில்களுக்கு தானம் அளித்தும், நிர்வகித்தும்,  வழிபாடுகளை சிறப்புறச் செய்தும்  திருப்பணி ஆற்றியுள்ளார். அவற்றுள் சில:
  • திருச்சேலூர் (தேவராயன்பேட்டை)
  • திருநறையூர் (திருநாரையூர்)
  • திருவெண்ணைநல்லூர்
திருநல்லம் என்ற கோனேரிராசபுரம்
  • கும்பகோணம் அருகே உள்ளது கோனேரிராசபுரம்.
  • இங்கிருந்த பழைய கோயிலை தனது மைந்தன் உத்தமச்சோழரின்
    3 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 974) கண்டராதித்தம் என்ற கற்றளியாக ஆக்கினார் என்று அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. இது அவர் திருப்பணி செய்த முதல் திருக்கோயில் ஆகும்.
  • கருவறை தென்சுவரில் உள்ள கல்வெட்டு இந்த கோயிலை எடுப்பித்தவன் 'ஆலந்தூருடையான் சாத்தன் குணபட்டனான அரசரண சேகரன்' என்றும் அவன் 'ராஜகேசரி மூவேந்த வேளாளன்' என்ற சிறப்பு பட்டம் பெற்றவன் என்றும் தெரிவிக்கிறது. 
  • தட்சிணாமூர்த்தியின் தேவகோட்டத்திற்கு அருகில் கண்டராதித்தர் சிவ லிங்கத்தை வணங்கும் சிற்பம் உள்ளது. அதன் கீழ் ஒரு கல்வெட்டும் உள்ளது. "ஸ்ரீகண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருள்வித்து இத்திருக்கற்றளியிலே திருநல்லமுடையாரைத் திருவடி தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீகண்டராதித்த தேவர் இவர்... "

  • இதன் அருகில் செம்பியன் மாதேவியின் சிற்பமும் உள்ளது.
  • இதே கோயிலில் அவரது பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும் கல்வெட்டும் உள்ளது: "ஸ்ரீ மதுராந்தகத் தேவரான உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த பிராட்டியார் செம்பியன்மாதேவியார் திருநக்ஷத்திரமான
    திருக்கேட்டைதோறும் பெரும்பலி எழுந்தருள ஓராட்டைக்கு வேண்டும் நெல்லு எழுபதின் கலத்துக்குத் திருத்துருத்தி திருநல்லத்தில் ஒன்பதின்மா முந்திரிகைக்கீழ்"
  • உலகிலேயே பெரிய அளவில் தொன்மையான ஐம்பொன் நடராஜர் சிலையை நிறுவினார் செம்பியன் மாதேவி. 
  • அதே கோவிலில் ஐம்பொன்னாலான செம்பியன் மாதேவி சிலை  முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிறுவப்பட்டது.
செம்பியன் மாதேவி

நாகை மாவட்டம் கீழ் வேளூர் ரயில் நிலையம் அருகில் உள்ளது செம்பியன் மாதேவி என்ற ஊர். இது செம்பியன் மாதேவி தன் பெயரால் உருவாக்கிய 'செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலம்' ஆகும்.

முதலாம் ராஜேந்திர சோழர் 1019 ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவியை, பார்வதியின் அவதாரமாக கருதி, நாகப்பட்டினம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் கல்லால் ஆன செம்பியன்மாதேவி சிலையை அமைத்தார். இன்று வரை அங்கு பூஜை நடைபெற்று வருகிறது. எந்நேரமும் கோயில் பணிகளுக்கு ஆயத்தமாக கூப்பியக் கைகள், காசுகள் அடங்கிய சுருக்குப் பையுடன் காட்சி தருகிறார்..

இக்கோவிலில் இவரது மருமகள்கள் ஐவர் ஒன்று சேர்ந்து " பிராட்டியார் திருநாளான சித்திரை திருக்கேட்டை நாள்" ஐ சிறப்பாகக் கொண்டாடினர் என்பது கல்வெட்டு மூலம் தெரிகிறது.

செம்பியன் மாதேவி கலைப் பாணி

செம்பியன் மாதேவி கற்றளியாகப் புனரமைத்த, புதிதாக நிறுவிய கோயில்களில் ஐந்து தேவ கோஷ்டங்களுக்குப் பதிலாக 9 முதல் 16 தேவ கோஷ்டங்கள் வரை அமைந்துள்ளன. அதிகப்படியான தேவ கோஷ்டங்கள் அர்த்த மண்டபத்தின் இருபுறமும் (வடக்கு, தெற்கு) உள்ளன. 
  • வடக்கில் மேற்கில் இருந்து கிழக்காக: துர்க்கை, அர்த்தனாரீசுவரர், பிட்சாடனர், (கங்காதரர்)
  • தெற்கில் மேற்கில் இருந்து கிழக்காக: விநாயகர், நடராஜர், அகத்தியர், (ஆலிங்கன மூர்த்தி)
முருகன், காலசம்ஹாரர், வீணாதரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன. 

செம்பியன் மாதேவி கோயில் அதிஷ்டானங்கள் பெரும்பாலும் பத்மபந்த அதிஷ்டானங்களாக அமைந்தவை.

பிறந்த தினம்: சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரம்

துணை 


பொ. இராசேந்திரன். சொ,சாந்தலிங்கம்; கோயிற் கலை; NCBH; 5 ஆம் பதிப்பு; 2021

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021















No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...