Friday, 9 September 2022

அஷ்டாங்க விமானம்

அஷ்டாங்க விமானங்கள்.திராவிடக் கோயில் கட்டுமானக் கலையின் 
உச்சம். சாந்தார தொழில் நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி உருவாக்கப் பட்டவை. இம் மரபு திராவிடக் கலையில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.வேறு மரபுகளில் இல்லை.

அஷ்டாங்க விமானம் பெருமாளுக்கே உரிய விமான வகையாகும். ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று கருவறைகள் அமைவதே அஷ்டாங்க விமானம். அஷ்டாங்க விமானம் என்னும் சொல் வைணவ பாரம்பரியத்தில் இவ்வகை கோயில்களுக்கு பயன்படுத்தப்படும் சொல்லேயன்றி திராவிட கட்டடக் கலைச் சொல் அல்ல. 

இவ்வகைக் கோயில்கள் மூன்று தளங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று கருவறைகளையும், அவற்றைச் சுற்றி வருவதற்கு வழிகளும் உடையன. இதற்கு ஏற்ப சாந்தாரமாக அமைந்துள்ளன.

திருமாலின் அமர்ந்த, நின்ற ,கிடந்த திருவுருவங்களை ஒரே விமானத்தில் எழுந்தருளச் செய்வதற்கு தகுந்த விமான அமைப்பாக அஷ்டாங்க விமானங்கள் உள்ளன. ஆனால் மூன்று கருவறைகளில் இந்த மூன்று வடிவங்கள் அமைந்துள்ள மேல் கீழ் முறை வேறுபடுகின்றது. கீழ் கருவறையில் உள்ள இறைவனுக்கே தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன. 

வைணவ மரபில் வைகானஸ ஆகமத்தில் மரீசி சம்ஹிதை அஷ்டாங்க விமான கட்டுமான நெறிகளை தெரிவிக்கிறது. காலத்தால் முற்பட்ட முதல் அஷ்டாங்க வகை விமானம் மாமல்லபுரம் தர்மராஜர் இரதம் எனப்படும் அத்யந்தகாம பல்லேஸ்வரம் எனும் ஒற்றைக் கல் தளி.  இதன் மூலம் பொ ஆ 7 ம் நூற்றாண்டுக்கு முன்னரே இவ்வகை கட்டுமானத்திற்கான கணக்கீடுகளும் திட்டநெறிகளும் இருந்தமை தெரிகிறது. 

இந்த விமானம் விஷ்ணுவுக்கு உரியது அன்று, சிவனுக்குரியது. ஆகம பிரியனாகிய இராஜசிம்மன் ஆகமத்திற்கு எதிராக இத்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே ,ஆரம்ப காலங்களில் இவ்வகை விமானங்கள் பொதுவாக வழங்கி வந்த நிலையில் 8 ம் நூற்றாண்டிற்குப் பின்னர் வைணவ மரபில் மட்டும் வழங்கி வருவது தெரிகிறது.

அஷ்டாங்க விமானங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. 
  1. தர்மராஜ ரதம், மாமல்லபுரம் (பொ. ஆ. 7 ஆம் நூற்றாண்டு)
  2. வைகுந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம் (பொ. ஆ. 8 ஆம் நூற்றாண்டு)
  3. சுந்தரவரதர் கோயில், உத்திரமேரூர் (பொ. ஆ. 8 ஆம் நூற்றாண்டு)
  4. கூடலழகர் கோயில், மதுரை 
  5. சௌமியநாராயணப் பெருமாள் கோயில், திருக்கோட்டியூர்
  6. ராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்கோயில், திருநெல்வேலி மாவட்டம்
  7. ராமசாமி கோயில், சேரன்மாதேவி
  8. அஷ்டலக்ஷ்மி கோயில், சென்னை
  9. அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில், எண்ணாயிரம்*
பிரம்மாண்டமான சௌமியநாராயணர் கோயிலில் பெருமாள் மேலுள்ள மூன்று திருக்கோலங்களில் மட்டுமின்றி நான்காவதாக நடன திருக்கோலத்திலும் காட்சி தருகிறார். 

20 ஆம் நூற்றாண்டு கட்டுமானமான அஷ்டலக்ஷ்மி கோயில் சுந்தரவரதர் கோயிலின் நகல் ஆகும்.

தர்மராஜ ரதம், மகாபலிபுரம்


வைகுந்த பெருமாள் கோயில்


ராமசாமி கோயில், சேரன்மாதேவி
(நன்றி: விஜய் ஷங்கர் பட்)
  • ராமசாமி கோயில் சேரன்மாதேவியில் உள்ள ஒரு அஷ்டாங்க விமானம். பாண்டிய நாட்டில் சோழர்கள் 1000 ஆண்டுகள் முன் கட்டியது. கிழக்கு நோக்கியது. 
  • ஆதி நாராயணன் கீழ் தலத்தில் திருமகள், நில மகளுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார்.
  • வீற்றிருந்த பெருமாள் இரண்டாம் தலத்தில் திருமகள், நிலமகளுடன் இருந்த கோலத்தில் இருக்கிறார்.
  • திருப்பாற்கடல்நாதன் மூன்றாம் தலத்தில் ஆதிசேஷன் மீது கிடந்த கோலத்தில் இருக்கிறார்.
  • ராஜராஜ சோழனின் 24 ஆம் ஆட்சியாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு இவ்வூரை 'சேரன்மாதேவி சதுர்வேதிமங்கலம்' என்றும் கோயிலை 'நிகரிலி சோழ விண்ணகர் ஆழ்வார் கோயில்' என்றும் அழைக்கிறது.

நன்றிக்கடன்

அம்பை மணிவண்ணன்; ஆகம சிற்ப சாஸ்திரங்களில் திருக்கோவில் அமைப்பும் திருவுருவ அமைதியும்; AR பதிப்ப்கம்; இரண்டாம் பதிப்பு 2015

சுரேந்திரன் Dr; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

*Dr K Dakshinamoorthy; The architectural legacy of Dhrmaraja Ratha; BUUKS; Ist Ed; 2021

No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...