கிரீவமும் சிகரமும், ஸ்தூபியும் விமானத்தின் தனித்த அங்கங்கள். என்றாலும் அவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பொருந்திய விமான மேல் கட்டுமானமாக உள்ளன.
ஒரு விமானம் நாகரமா, வேசரமா, திராவிடமா என்பதை கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபியின் வடிவமே தீர்மானிக்கிறது. அவற்றுள்ளும் கூடமா, சாலையா? விருத்தமா, விருத்தாயதமா, கஜ பிருஷ்டமா? எண்பட்டை திராவிடமா, ஆறு பட்டை திராவிடமா? என்பதையும் இந்த மூன்று உறுப்புகளைக் கொண்டு அறியலாம். இந்த மூன்று அங்கங்களும் ஓரே வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பிற்காலத்தில் அனைத்துவகை விமானங்களிலும் உலோகத்தால் ஆன விருத்த (வட்ட) வடிவ ஸ்தூபிகளே பொருத்தப்பட்டுள்ளதால், நடைமுறையில் விமானத்தின் வடிவ வகையை கிரீவம், மற்றும் சிகரத்தின் வடிவமே தீர்மானிக்கிறது. அவற்றுள்ளும் கிரீவம் கோட்டம், இறை வாகனங்கள் முதலியவற்றால் மறைக்கப்ப்ப்படுவதால், எளிதில் தெளிவாகத் தெரிவது சிகரத்தின் வடிவமே ஆகும். நடைமுறையில் சிகரத்தின் வடிவத்தைக் கொண்டு விமானத்தின் வடிவ வகையை அறிந்து கொள்ளலாம்.
பெயர்கள்
கிரீவத்திற்கு 'கண்டம்' என்றும் பெயர் உண்டு. கிரீவம், கண்டம் என்றால் கழுத்து பொருள். 'களம், கர்ணம், மூஷிகம்' என்பன இதன் மற்ற பெயர்கள்.
சிகரத்திற்கு 'பண்டிகை, மஸ்தகம், சிரம்' என்ற பெயர்களும் உண்டு. மஸ்தகம், சிரம் ஆகியவை வடமொழியில் தலையைக் குறிக்கும் சொற்கள்.
கிரீவம்
கிரீவம் மேல் தலத்தின் மீது அமைகிறது. இந்த கடைசி தலத்தின் மீது ஆரம்ப கால பல்லவர் விமானங்களில் ஹாரம் இருந்தது. பின்னர் மேல் தலத்தின் மீது ஹாரத்திற்கு பதிலாக மூலைகளில் கோயிலில் உறையும் இறைவனின் வாகனம் இடம் பெறத் துவங்கியது. இந்த வாகனங்கள் மற்றும் கிரீவகோஷ்டங்களில் உள்ள இறை உருவங்களைக் கொண்டு கோயில் எந்த இறைவனுக்கு உரியது என்பதை அறியமுடியும்.
- சிவன் - நந்தி, பூதம்
- சிம்மம் - தேவி, ஜைனர், விஷ்ணு
- கருடன் - விஷ்ணு
- மூஞ்சூறு- விநாயகர்
கிரீவ உறுப்புகள்
கிரீவம் கீழ்கண்ட உறுப்புகளைப் பெற்று விளங்கும்.
- வேதி
- கிரீவம்
- கிரீவ கோஷ்டங்கள்
- வலபி
| கிரீவம் எசாலம், விழுப்புரம் அருகில் |
கிரீவ கோஷ்டம்
மேற்கண்ட படத்தில் கிரீவ கோஷ்டம் முன்தள்ளி இருப்பதையும், முழுத் தூண்களைக் கொண்டிருப்பதையும் காணலாம். கிரீவத்தோடு ஒட்டியவாறு இருப்பது மற்றொரு வகை.
அனைத்து கிரீவ கோஷ்டங்களிலும் உள்ள இறைவர்கள் அமர்ந்த நிலையிலேயே இருப்பர். திசைக்குரிய தெய்வங்கள் வகுக்கப்பட்டுள்ளனர்,
சிவன் கோயில்களில் கிரீவ கோஷ்ட தெய்வங்கள்:
- தெற்கு - வீணாதர தட்சிணாமூர்த்தி / வீரபத்திரர்
- மேற்கு - விஷ்ணு / நரசிம்மர் / அச்சுதன்
- வடக்கு - பிரம்மா / குபேரன்
- கிழக்கு - இந்திரன் / குகன் / சந்திரன்
மேலுள்ள படத்தில் வலதுபுற கோஷ்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். எனவே, இது தென் திசைக் கோட்டம் என்று அறிய முடியும்.
கிரீவ சுவர் பகுதியின் மேல்புறத்தில் வலபி இருக்கும். அதில் அன்னம் முதலியவற்றின் வரிசை அமையும்.
விருத்த ஸ்புடிதம்
![]() |
| விருத்த ஸ்புடிதம் முதலாம் பராந்தகனின் புஞ்சை நற்றுணையப்பர் கோயில் படம் நன்றி: இரா ச இராசவேலு |
விருத்த ஸ்புடிதம் முற்கால சோழர் கட்டுமானத்தில் சிறப்பு பெற்றது. குறிப்பாக ஆதித்த சோழன் திருப்பணிகளான தில்லைஸ்தானம், திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருப்பந்துருத்தியில் காணப்படுகின்றன. பல்லவர் கால கோயில்களில் கணேச ரதத்தில் மட்டுமே காணப்படுகிறது. பாண்டியர் கோயில்களில் இரண்டாம் வரகுண பாண்டியனின் திருப்பத்தூர் கோயிலில் இடம் பெற்றுள்ளது. முத்தரையர்களின் நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரமும் விருத்த ஸ்புடிதம் கொண்டுள்ளது. பொதுவாக 10 ஆம் நூற்றண்டிற்குப் பிறகு விருத்தஸ்புடிதம் அரிதாகிவிட்டது. (ஆர் நடராஜன் TMVAS)
சிகரம்
சிகரத்தின் பாகங்கள்
- ஓஷ்டம்
- கண்ட மாலை
- கோடிப்பாளை
- கண்ணாடிச் சட்டம்
- மகா பத்மம்
- மகா நாசி
- அனு நாசி
| சிகரம் (விசலூர்) |
| கிரீவமும் சிகரமும் தஞ்சை பெரிய கோயில் |
ஓஷ்டம்
சிகரத்தின் கீழ்ப் பகுதி கிரீவத்தின் மேல் பகுதியை மூடியவாறு வெளியே பிதுங்கிக்கொண்டிருக்கும். இது ஓஷ்டம் அல்லது தூக்கோடு எனப்படும். ஒஷ்டம் (வடமொழி) என்றால் உதடு. இதன் கீழ்ப் பகுதியில் 'சந்திர மண்டலம்' என்னும் வட்டங்களின் வரிசை இருக்கலாம்.
கண்ட மாலை
ஓஷ்டம் சிகரத்தின் மேற்பகுதியோடு சேரும் கழுத்துப் பகுதியை அலங்கரிக்கும் அமைப்பை 'கண்ட மாலை' என்பர். இது தாமரை இதழ்களின் கட்டு போல இருப்பது.
கோடிப்பாளை
சந்திர மண்டலத்திற்கு மேல், மகா நாசிகளுக்கு இடையில் 'கோடிப்பாளை' என்னும் கொடிக்கருக்கு அணி காணப்படும். மேலிருந்து தொங்கும் பதக்கம் அல்லது கொடிகருக்கு போல அமையலாம். இது விமானங்கள் மரத்தால் கட்டப்பட்டபோது சட்டங்களை இணைக்கப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடுகளின் அணி செய்யப்பட்ட நகல் எனக் கருதப்படுகிறது.
கண்ணாடிச் சட்டம்'
சிகரத்தின் பரப்பு சாய் சதுரங்களாக பிரிந்த அணிக்கு 'கண்ணாடிச் சட்டம்' என்று பெயர். இதற்குப் பதிலாக ஓடுகள் போன்ற 'அலுங்கு' என்ற அணியும் இடம் பெறலாம். அலுங்கு என்பது எறும்புத் தின்னியின் பெயர். அதன் செதில்கள் போல் அமைந்துள்ளதால் இந்தப் பெயர்.
மகா பத்மம்
இது சிகரத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள மேல் நோக்கிய தாமரை. இதன் நடுவிலிருந்தே ஸ்தூபி எழுகிறது.
மகா நாசி
சிகரத்தின் நான்கு புறங்களிலும் 'மகா நாசி' என்னும் பெரிய நாசிகள் அமையும். இவை கிரீவ கோஷ்டங்களுக்கு மேல் அவற்றோடு இயைந்து காணப்படும். மகா நாசிக்குள் நான்கு அல்லது ஆறு அங்க விமானம் இருக்கும். திசைக்குரிய தெய்வங்களும் இருக்கலாம். இவை எதுவும் இன்றியும் இருக்கலாம்.
| மகா நாசி வகைகள் கொடும்பாளூர் மூவர் கோயில், எசாலம், தஞ்சை பெரிய கோயில் |
அனு நாசி
மகா நாசிகளுக்கு இடையில் அல்லது முன் நீண்டிருக்கும் மகா நாசியின் பக்கத்தில் அமைந்திருக்கும் நாசி 'அனு நாசி' எனப்படும். இது அல்ப நாசியை விடப் பெரியதாக இருக்கும்.
| அனு நாசி |
துணை
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3
Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)
சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை;
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I

No comments:
Post a Comment