கருவறையில் இருந்து நிர்மால்ய நீர் வெளியேற நிறுவப்படும் அமைப்பிற்கு 'பிரநாளம்' அல்லது 'கோமுகை' என்று பெயர்.
கருவறையில் உள்ள இறைவனை குளிப்பாட்டும் பொருட்கள் கலந்த நீர் 'நிர்மால்ய நீர்' ஆகும். இறைவனை அலங்கரிக்கும் மாலை முதலியவை, படைக்கப்படும் அன்னம், நீர் ஆகியவை இறை உருவத்தின் அணுக்கத்தினால் தூயவை ஆகின்றன. அவை 'நிர்மால்யம்' எனப்படும். இச்சொல்லுக்கு நிர்மலம், தூய்மை என்று பொருள்.
தூய்மையான நிர்மால்ய நீரை வெளியேற்றும் வழி ஆதலால் இது அழகுற அமைக்கப்படுகிறது.
இதன் முன்புறத் தோற்றம் பசுவின் முகத்தைப் போல உள்ளதால் 'கோமுகை' என்றும் பெயர்.
திசை
பிரநாளம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமையும்.
- கிழக்கு அல்லது மேற்கு பார்த்த கருவறைகளுக்கு - வடக்கு நோக்கி
- வடக்கு அல்லது தெற்கு பார்த்த கருவறைகளுக்கு - கிழக்கு நோக்கி
இடம்
பிரதிபந்த தாங்குதளத்தில் பிரதியின் மேல் மட்டத்தில் அமைக்கவேண்டும். பிரதிபந்த தாங்குதளம் வெட்டுப்படக்கூடாது என்பது விதி.
பாதபந்த தாங்குதளத்தில் கருவறையின் தரை மட்டத்தைப் பொறுத்து பாதபந்தத்தின் உறுப்புகளான உபானம், ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை ஆகிய ஐந்தில் எதாவது ஒன்றின் மேல் மட்டத்தில் அமைக்கலாம்.
கருவறையின் தரை உபபீட மட்டத்தில் இருந்தால் உபபீட மட்டத்திலும் பிரநாளத்தை அமைக்கலாம்.
உறுப்புகள்
பாத்திரம் - கருவறையின் உள்ளே நிர்மால்ய நீர் தேங்கும் குழி அல்லது தொட்டி.
நிர்மால்ய துவாரம் - நிர்மால்ய நீர் பாத்திரத்தில் இருந்து வெளியேறும் ஓட்டை
முகம் - பிரநாளம் துவங்கும் இடத்தில் சிம்ம முகம் அல்லது வியாழ முகம் அமைந்து பிரநாளம் அதன் வாயிலிருந்து வருவது போல் இருக்கும். முகம் இல்லாமலும் அமைக்கலாம். அவ்வாறு முகம் இல்லாத பிரநாளம் யானையின் உதடு தொங்குவது போல அமையவேண்டும்.
நாளம் அல்லது அம்பு மார்க்கம் - அம்பு = நீர்; மார்க்கம் = வழி. முகத்தின் வாயிலிருந்து வெளிவரும் நீர் வழி. இது எட்டு பட்டை, ஒற்றை பத்திருப்பு, இரட்டை பத்திருப்பு உடையதாக இருக்கலாம்.
லிங்க வடம் - நாளத்திற்கும் பூமுனைக்கும் இடைப்பட்ட பகுதி. வாஜனம், பத்மம் உடையது.
பூமுனை - வாழைப்பூ போன்ற முனை. நிர்மால்ய நீர் வெளியேறும் இடம்.
தாங்கி - யாழி, சிம்மம், பூதம் பிரநாளத்தை தாங்குவது போல அமைக்கலாம்.
| ர் |
| பிரநாளத்தைத் தாங்கும் பூதம் |
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I
ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3
Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)
.
No comments:
Post a Comment