Saturday, 10 September 2022

தூண்

மாற்றுப் பெயர்கள்

தூணின் மற்ற பெயர்கள்
  • ஸ்தம்பம் - துவஜ ஸ்தம்பம், கருட ஸ்தம்பம், ஸ்தம்ப தோரணம் போல
  • பாதம் - பாத பந்தம், கண்ட பாதம் போல
  • கால் - ஆயிரம் கால் மண்டபம் போல
  • கம்பம் 
தலி, தலிபம், பாரம், பாரகம், ஸ்தூபினம், ஸ்தானு, ஜெயம், ஜங்கை, அங்கரி, சரணம், ஆரணி என்ற பெயர்களும் கட்டட சிற்பக் கலை நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

மரத்தால் ஆன தூண் 'தாரு ஸ்தம்பம்' எனப்படும்

தூண்களின் உறுப்புகள்

தூண் உறுப்புகள்
(போதிகை தூண் உறுப்பு அல்ல.
மாலா ஸ்தானம், மாலைத் தொங்கல் ஆகியவை இந்தத் தூணில் செதுக்கப்படவில்லை. அவற்றின் இடங்கள் காட்டப்பட்டுள்ளன.)

தூண் உறுப்புகள் கீழிருந்து மேலாக (மாற்றுப் பெயர்களுடன்)
  • ஒமா/ அஸ்வபாதம்
  • உடல்
  • மாலைக்கட்டு/ மாலைத்தொங்கல்
  • மாலாஸ்தானம்
  • தாமரைக்கட்டு
  • கலசம் (எட்டு பட்டையாக இருக்கும் போது பூண்டு போல இருப்பதால் 'லசூனா' எனப்படும்- மேலுள்ள படத்தில் இருப்பது போல)
  • தாடி
  • கும்பம் (குடம்) (எட்டு பட்டையாக இருக்கையில் நெல்லிச் சுளைகள் போல் அமைவதால் அமலகம் என்ப்படும்; அமலா - நெல்லிக்காய்)
  • மண்டி (பலிகை) - மேல் நோக்கிய தாமரை போன்ற அமைப்பு உடையது. மேலுள்ள படத்தில் இருப்பது போல இதழ்கள் இல்லாமல் இருந்தால் பாலி மண்டி, இதழ்களோடு இருந்தால் பத்ம மண்டி. நாக தலை மண்டி இன்னொரு வகை.
  • பலகை
  • வீர கண்டம் (சிகை, சிகா)

தூண் வகைகள்

தூண்களை கும்பம், பலகை முதலிய தூண் மேல் உறுப்புகளைப் பொறுத்து இரண்டாகப் பிரிக்கலாம். அவற்றினுள் தூண் உடலின் வடிவத்தைப் பொருத்து அவற்றை மேலும் வகைப்படுத்தலாம்.

1. கும்பம், பலகை முதலிய மேல் உறுப்புகள் உள்ள தூண்களின் வகைகள்
  • வட்டம் - ருத்ர காந்தம்
  • நான்கு பட்டை சதுர வடிவம் - பிரம்ம காந்தம்
  • ஐந்து பட்டை - சிவ காந்தம்$
  • ஆறு பட்டை - இந்திர காந்தம் (அ) ஸ்கந்த காந்தம்)
  • எட்டு பட்டை - விஷ்ணு காந்தம்
  •  12 பட்டை - ஆதித்ய காந்தம்
  • 16 பட்டை - சந்திர காந்தம் (அ) சௌமிய காந்தம்
  • பிரம்ம காந்தத் தூணின் பக்கங்கள் பத்திகளாகப் பிரிந்து வெளித்தள்ளி உள்ளது - பத்ர காந்தம்.
(சிலர் நீள் சதுரத்தை விஷ்ணு காந்தம் என்றும் எட்டு பட்டைத் தூணை வசுகோண காந்தம் என்றும் குறிப்பது உண்டு. ஐந்து பட்டைத் தூணை சிவகாந்தம் என்பதும் உண்டு$).

2. கும்பம், பலகை முதலிய மேல் உறுப்புகள் இல்லாத தூண்களின் வகைகள்
  • ஸ்ரீ ருத்திர காந்தம், ஸ்ரீ ருத்திரம் (காஸ்யபம்), சுண்டு பாதம் (மயமதம்) - வட்ட வடிவம்.
  • மத்திய ருத்திர காந்தம் - அடிப்பகுதியும், மேல்பகுதியும் சதுரம், நடுப்பகுதி எட்டு பட்டை/ 16 பட்டை/ வட்ட வடிவம். (எட்டு பட்டை தான் காணக்கிடைக்கிறது.)
  • சிவ காந்தம் - அடிப்பகுதி சதுரம், நடுப்பகுதி எட்டுப்பட்டை, மேல் பகுதி வட்ட வடிவம் - 
  • பூர்வாஸ்ர தூண் - அடியில் சதுரம், அதன் மேல் 8 பட்டை, 16 பட்டை, 32 பட்டை, மேலே வட்ட வடிவம் உடைய தூண். (அஸ்ர = பக்கம்)
  • சதுரம், 8பட்டை, 16 பட்டை -  தனிப் பெயரில்லை
  • சித்திரக் கண்டத் தூண் - மூன்று சதுரங்களும் இடையே இரண்டு 8/16 பட்டை கட்டுகளும் உடைய் தூண். 
  • பிண்டி பாதம் (அ) கோஷ்ட ஸ்தம்பம்) - சதுர வடிவத் தூணில் ஒன்றன் மேல் ஒன்றாக விமான் அமைப்புகள் உள்ளது.
  • பாத வகைகள்

    அடிப்பகுதியில் விலங்குகள், பூதங்கள் முதலியன இடம் பெறும் தூண்கள். எகா - சிம்ம பாதம், யாழி பாதம், இப பாதம், பூத பாதம்.

    சம்யுக்த தூண் (அ) அணிவொட்டிக்கால்

    மையத் தூணுடன் சிறு தூண்கள் அல்லது தனிச் சிற்பம் சேர்ந்து அமைந்த கூட்டுத் தூண்.

    1. கும்பம், பலகை முதலிய தூண் மேல் உறுப்புகள் உள்ள தூண்களின் வகைகள்.



    பிரம்ம காந்தம் - சதுர வடிவம் 

    மூன்று பிரம்ம காந்தத் தூண்கள் 
    எசாலம் (11 ஆம் நூற்றாண்டு சோழர்)

    விஷ்ணு காந்தம் - எண் பட்டை வடிவம் 

    விஷ்ணு காந்தம் 
    கூழமந்தல் (11 ஆம் நூற்றாண்டு சோழர்)

    இந்திர காந்தம்  அல்லது ஸ்கந்த காந்தம் - ஆறு பட்டை வடிவம் 

    இந்திர காந்தத் தூண்

    சந்திர காந்தம் (காஸ்யபம்) /-  சௌமிய காந்தம் (மயமதம்) 

    16 பட்டை வடிவம்

    சந்திர காந்தம் 
    (நன்றி: திருமதி சவுந்தரி ராஜ்குமார்)

    ருத்திர காந்தம் 

    அடிப்பகுதி சதுரம், நடுப்பகுதி 8 பட்டை அல்லது 16 பட்டை அல்லது வட்ட வடிவம்.*

    ருத்திர காந்தம்
    (நன்றி: திருமதி சவுந்தரி ராஜ்குமார்)

    பத்ர காந்தம் 

    பிரம்ம காந்தத் தூணின் பக்கங்கள் பத்திகளாகப் பிரிந்து வெளித்தள்ளி உள்ளது. தமிழகத்தில் ஒரு அடுக்கு பிதுக்கம் உடைய தூண்களே உள்ளன. கர்னாடகத்தில் ஒரு அடுக்குக்கு மேற்பட்ட பிதுக்கங்கள் உடைய தூண்கள் உள்ளன.

    பத்ர காந்தம் 
    (குகை 3-வைணவக குகை, பாதாமி)
    (பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டு; சாளுக்கியர்)

    2. கும்பம், பலகை முதலிய தூண் மேல் உறுப்புகள் இல்லாத தூண்களின் வகைகள்

    ஸ்ரீ ருத்திர காந்தம் வட்ட வடிவம். இது காஸ்யபத்தில் ஸ்ரீ ருத்திரம் என்றும் மயமதத்தில் சுண்டு பாதம் எனவும் அழைக்கப்படுகிறது. 

    ஸ்ரீ ருத்ர காந்தம்
    (ஜம்பை)

    மத்திய ருத்திர காந்தம் 

    அடிப்பகுதியும், மேல்பகுதியும் சதுரம், நடுப்பகுதி எட்டு பட்டை/ 16 பட்டை/ வட்ட வடிவம். ஆனால், எட்டு பட்டை தான் காணக்கிடைக்கிறது.

    மத்திய ருத்திர காந்தம்
    மண்டகப்பட்டு

    சிவகாந்தம் 

    அடிப்பகுதி சதுரம், நடுப்பகுதி எட்டுப்பாட்டை, மேல் பகுதி வட்ட வடிவம் கொண்ட தூண். மூன்று பகுதிகளும் சம அளவு. இது லிங்கத்தின் வடிவமே ஆகும். எனவே சிவன் கோயில்களுக்கு மிகவும் ஏற்றது.

    நன்றி: Jagadeeswarann99 at Tamil Wikipedia., GFDL <http://www.gnu.org/copyleft/fdl.html>, via Wikimedia Commons

    பூர்வாஸ்ர தூண்

    அடியில் சதுரம், அதன் மேல் 8 பட்டை, 16 பட்டை, 32 பட்டை, மேலே வட்ட வடிவம் உடைய தூண். (அஸ்ர = பக்கம்)

    பூர்வாஸ்ர தூண்

    பெயரில்லாத வகைகள் 

    சதுரம், 16 பட்டை 

    சித்திர கண்டத் தூண்

    ஐந்து பாகங்கள் உடைய தூண். மேல், நடு, அடிப் பகுதிகள் சதுரம். சதுரங்களின் பக்கங்களில் சிற்பங்கள். இடையே உள்ள இரு கட்டுகள்.   உயரமான சித்திர கண்டத் தூண்களில் ஐந்து சதுரங்களும், நான்கு கட்டுகளும் கொண்டிருக்கலாம்.

    கட்டுகளின் வடிவத்தைப் பொறுத்து சித்திர கண்டத் தூண்கள் இரு வகைப்படும்:
    • எட்டுப் பக்கம் - ஸ்ரீ கண்டம்.  இது பொதுவாக நடுவில் 4 பக்க பட்டையைக் கொண்டிருக்கும்.
    • 16 பக்கம் - ஸ்ரீ வஜ்ரம்.  இது பொதுவாக நடுவில் 8 பக்க பட்டையைக் கொண்டிருக்கும்.
    சித்திர கண்டத் தூணில் கும்ப மண்டி முதலியன இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

    ஸ்ரீ வஜ்ரம் -  16 பக்க கட்டு, அதன் நடுவில் 8 பக்க பட்டை
    (ஆவூர் - நாயக்கர் காலம்)

    ஸ்ரீ கண்டம் -  சித்திர கண்டத் தூண் 8 பட்டை
    (ஆவூர் - நாயக்கர் காலம்)

    பிண்டி பாதம்

    சதுர வடிவமான தூணின் நான்கு பக்கங்களிலும் மேல் கீழ் அடுக்குகளாக விமான அமைப்புகள் செதுக்கப்பட்டிருக்கும் தூண் பிண்டி பாதம். இது 'கோஷ்ட ஸ்தம்பம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    பிண்டிபாதம் - ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்

    பாத வகைகள்
     
    தூண்களின் அடிப்பகுதியில் விலங்குகள், பூதங்கள் முதலியன இடம் பெறலாம். அவற்றைக் கொண்டும் தூண்களைப் பெயரிடலாம்.
    • சிம்ம பாதம்
    • யாழி பாதம்
    • இப பாதம்
    • பூத பாதம்
    இவற்றுள் முதல் மூன்று வகைகள் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் உள்ளன. பூத பாதம் தாராசுரம் ஐராவதேசுவரர் ஆலயத்தில் ராஜகம்பீரன் மண்டபத்தில் உள்ளது.

    சிம்மத் தூண்

    பூத பாதம்
    (ரங்கநாதர் கோயில், திருவரங்கம்)

    வகைகள்

    தூண்களின் அமைவிடம் மற்றும் பயன்பாடு சார்ந்து அவற்றை இவ்வாறு பிரிக்கலாம்.
    • பித்தி தூண்கள் (காண்க: பித்தி)
    • மண்டபத் தூண்கள்
    • தோரணத் தூண்கள் (காண்க: தோரணம்)
    • தனித் தூண்கள்
    இவற்றைப் பற்றி பித்தி, மண்டபங்கள், தோரணங்கள், கொடி மரம், தனித்தூண்கள் பற்றிய பகுதிகளில் காணலாம்.

    நாகபந்தம்/ நாக வக்ரதம்

    நாகபந்தம் தூண்களின் மூலைகளை அலங்கரிக்கும் அமைப்புகள். இது நாக வக்ரதம் இன்றும் அழைக்கப்படும். இரண்டாம் ராஜராஜன் (பொ.ஆ 1146-1173) எழுப்பிய தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் முதன்முதலில் காணப்படுகிறது.

    இவை நாகப்படம் போல அமைந்தால் அது நாகபந்தம் அல்லது நாக வக்ரதம் எனப்படும். இவை கீழ் சதுரங்களின் மேல் மூலைகளில் காணப்படும். சதுரங்களின் மூலைகளில் பூ மொட்டு (புஷ்ப பந்தம்), பூதங்கள் ஆகியவையும் அமைவதுண்டு.

    நாக பந்தம், புஷ்ப பந்தம் (2)
    ஆவூர்

    சம்யுக்த தூண் என்ற அணிவொட்டிக்கால்

    சம்யுக்த தூண் என்பது மையத் தூணுடன் சிறு தூண்கள் அல்லது தனிச் சிற்பம் சேர்ந்து அமைந்த கூட்டுத் தூண்.

    சம்யுக்த ஸ்தம்பம் - 3 உப ஸ்தம்பங்கள்
    (நூல்களில் இடம் பெறாதது)
    (விரிஞ்சிபுரம் - நாயக்கர் காலம்)

    கூடுதல் சிறு தூண்கள் உப ஸ்தம்பம் எனப்படும். சம்யுக்த தூண்கள் உப ஸ்தம்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பெயர் பெறுகின்றன.#
    • 1 உப ஸ்தம்பம் - சுப்ரதி காந்தம்
    • 2 உப ஸ்தம்பங்கள் - சூர்ய காந்தம் (நூல்களில் பக்கத்திற்கு ஒரு துணைத் தூண் என்று கூறப்பட்டிருந்தாலும் நடைமுறையில் இரு தூண்களும் ஒரே பக்கத்தில்தான் அமைந்துள்ளன.
    • 4 உப ஸ்தம்பங்கள் - பிரம்ம காந்தம் (நான்கு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக அல்லது இரு பக்கங்களில் பக்கதிற்கு இரண்டாக)
    • 5 உப ஸ்தம்பங்கள் -  சிவ காந்தம் (மையத் தூண் இல்லாமல் 5 துணைத் தூண்கள் மட்டுமே உடையது)
    • 3 உப ஸ்தம்பங்கள் - விஜயநகர கால மண்டபங்கள் பலவற்றில் காணப்படும் இந்த வகை நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இது குறிப்பாக மண்டபத்தின் வெளி மூலைகளில் பயன்படுத்தப்பட்டது.
    சுப்ரதி காந்தம்
    (விரிஞ்சிபுரம் - நாயக்கர் காலம்)

    சூர்ய காந்தம்
    (அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு)

    பிரம்ம காந்த சம்யுக்த தூண் 
    (விரிஞ்சிபுரம் - நாயக்கர் காலம்)

    பிரம்மகாந்த சம்யுக்த தூண்

    சிவ காந்த சம்யுக்த தூண்

    உப ஸ்தம்பங்கள் தூண்களின் வெவ்வேறு வகைகளை கொண்டிருக்கலாம். பொதுவாக கும்பம், மண்டி முதலிய மேலுறுப்புகளுடன் அமையலாம். 8,16,32 பக்கங்களைக் கொண்டிருக்கலாம். 

    சம்யுக்த தூண்கள் உபஸ்தம்பங்களுக்குப் பதிலாக சிற்பங்களை கொண்டிருப்பது இன்னொரு வகை. இவற்றில் இரண்டு வகை உண்டு.

    1. குதிரை, யாழி அவற்றின் மீது அமர்ந்த வீரர்களோடு உள்ள சிற்பங்கள் 
        • யாழி  - வியாழ காந்தம்
        • குதிரை - அஸ்வ காந்தம்
        • சிங்கம் - சிம்ம காந்தம்
    வியாழ காந்தமும், அஸ்வ காந்தமும்
    (விரிஞ்சிபுரம் - நாயக்கர் காலம்)

    2. தூண்களோடு இணைந்த சிற்பங்கள் - இவ்வகைத் தூண்கள் நூல்களில் இடம் பெறவில்லை. எனவே பெயரும் பெறவில்லை.

    வீரபத்திரர், சிற்ப சம்யுக்த தூண்
    (ஆதிகும்பேஸ்வரர் கோயில், கும்பகோணம்)

    கும்ப பஞ்சரம் கொண்ட சம்யுக்த தூண்
    (ஆவூர் சிவன் கோயில், திருவண்ணாமலை மா)

    வியாழ பாத தூண்கள் - பல்லவர், சோழர்







    துணை

    சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

    *மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

    ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ்  http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3

    சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
    பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
    பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
    பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I


    $ சிவசங்கர் பாபு அமிர்தா வகுப்பு













    No comments:

    Post a Comment

    கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

    300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...