ஆகமங்கள் என்பன மனிதர்கள் இறைவனை உணர்ந்து நிறைவு (வீடுபேறு, முக்தி) அடைவதற்கான வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் நூல்கள். அவை மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கியவை.
பெயர்ப் பொருள்
- ஆகமம் (தமிழ்ச் சொல்லாக) = ஆ + கமம். ஆ - ஆன்மா, சைவ சித்தாந்தத்தில் பசு. கமம் - நிறைவு. 'ஆகமம்' என்ற சொல் உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை குறிக்கும். இது சைவ சித்தாந்தத்தின் படியான விளக்கமும் ஆகும்.
- ஆகமம் (வடமொழி சொல்லாக) = ஆ-அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம் - போதலை உணர்த்தும் வினையடி), ‘போய்ச் சேர்தல்’, ‘வந்தடைதல்’ என்னும் பொருளைத் தருவது.
- ஆகமம் என்பதற்கு “தொன்று தொட்டு வரும் அறிவு” என்றும் “இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்” என்றும் அறிஞர் பொருள் கூறுவர்.
வகைகள்
சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம் ஆகிய சமயங்களுக்கு தனித்தனியே ஆகமங்கள் உள்ளன. ஆகமங்கள் சிறப்பாக சைவ ஆகமங்களையே குறிக்கும் என்ற கருத்தும் உள்ளது. வைணவ ஆகமங்களுக்கு 'சம்ஹிதைகள்' என்றும் சாக்த ஆகமங்களுக்கு 'தந்திரங்கள்' என்றும் பெயர்.
ஆகமங்கள் தென்னிந்தியாவைச் சார்ந்தவை. இவை வட மொழியில் அமைந்தவை. ஆனால், கிரந்த வரிவடிவத்தில் மட்டுமே எழுதப்பட்டவை, (கிரந்தம் - வடமொழியை எழுத தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வரிவடிவம்).
ஆகமங்கள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவற்றின் மூல தத்துவம் ஆகமங்களிலேயே உள்ளடங்கி உள்ளது. ஆனால், அவை வேதங்களை மறுப்பதும் இல்லை.
அமைப்பு முறை
ஆகமங்கள் 4 பாதங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
- சரியை - தினசரி வாழ்வில் கடைப்டிக்கவேண்டிய நெறிமுறைகள்
- கிரியை - கோயில்களை எழுப்பும் முறைகள், வழிபாட்டு நெறிமுறைகள்
- யோகம் - பிராணாயாமம், தியானம் போன்ற யோக முறைகள்
- ஞானம் - தத்துவம் (சித்தாந்தம்)
கிரியை பாதத்தில் உள்ள கோயில் கட்டடக்கலை சார்ந்த நெறிகளை வாஸ்து, சிற்ப சாஸ்திர நூல்கள் பின்பற்றியுள்ளன. சான்றாக, சைவ ஆகமமாகிய காமிகாமத்தின் கிரியா பாதத்தில் உள்ள சுலோகங்களை வாஸ்து சிற்ப முதல் நூலாகிய 'மயமதம்' எடுத்தாண்டுள்ளது.
சைவ ஆகமங்கள்
மூல ஆகமங்கள் - 28
உப ஆகமங்கள் - 207
சைவ ஆகமங்கள் சிவனால் தன் ஐந்து முகங்களில் இருந்து ஐந்து முனிவர்களுக்கு அருளப்பட்டவை என்பது சைவர்கள் நம்பிக்கை. சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய முகங்களில் இருந்து முறையே 5,5,5,5,8 ஆகமங்கள்.
 |
ஐந்து முக லிங்கம் - வழித்துணை நாதர் கோயில், விரிஞ்சிபுரம் |
“ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்”
“மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித் தருளியும்”
- மாணிக்கவாசகர்
“சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே”
“தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றானே”
"நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே"
திருமூலர் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எனவே முதல் ஆகமங்கள் அதற்கு முற்பட்டவை. இது கொண்டு அப்போது வழக்கிலிருந்த செங்கற் தளிகளும் ஆகமங்களைப் பின்பற்றி இருக்க வேண்டும்.
28 ஆகமங்களில் கிடைத்துள்ளவை சிலவே.
- காமிகம்
- காரணம்
- மகுடம்
- தீப்தம்
- சுப்ர பேதம்
- அஜிதம்
- அம்சுமதம்
உள்ளடக்க செய்யுள்களின் எண்ணிக்கையை ஆகமங்களின் துவக்கத்தில் தரப்பட்டுள்ளன. அதன்படி சிலவே முழுமையாக கிடைத்துள்ளன.
தமிழகத்து கோயில்கள் எதாவது ஒரு ஆகமத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவை. தஞ்சை பெரிய கோயில் மகுடாகமத்தை பின்பற்றி அமைக்கப்பட்டது. கட்டும்போது மட்டும் அல்ல, வழிபாடு முதலிய அனைத்து கோயில் நடைமுறைகளிலும் அதே ஆகமம் பின்பற்றப்படும். கோயிலாகிய உடல், அதன் இயக்கம், அதன் உயிராகிய இறைவன் மூன்றும் ஒருங்கிணைந்து வழிபடுவோருக்குப் பலன் தர ஆகமங்கள் வழிகாட்டுகின்றன.
வைணவ ஆகமங்கள்
வைணவ ஆகமங்கள் இரண்டு:
இவை திருமால் மனித உருவெடுத்து முனிவர்களுக்கு அருளியவை என்பது வைணவர்கள் நம்பிக்கை.
- பாஞ்சராத்ரம் ஐந்து இரவுகளில் சாண்டில்ய முனிவர்க்கு அருளப்பட்டது, அதனால் அப்பெயர் பெற்றது.
- வைகானஸம், திருமால் வைகானச முனிவராகத் தோன்றி பிரம்மாவின் மன மகன்கள் (மானஸ புத்திரர்கள்) ஆன சனகர் முதலான நால்வருக்கு அருளியது.
இவை தவிர நூற்றுக்கும் அதிகமான உப ஆகமங்களும் வைணவத்தில் உண்டு.
 |
வைகானசர்- நெடுங்குணம் யோக ராமர் கோயில் வைணவ தட்சிணாமூர்த்தி |
திருமலை கோவில் வைகானசத்தின் படியும், திருவரங்கம் பாஞ்ராத்ரத்தின் படியும் இயங்குகிறன.
ராமானுஜர் பாஞ்சராத்திரத்தை வேதத்துக்கு இணையாகக் கருதினார். பாஞ்சராத்திர ஆகம விதிகள் திருவிலச்சினை முதலிய பஞ்ச சம்ஸ்கார தீட்சை பெற்ற பிராமணர் அல்லாதவர்களையும் சில கோயில் பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது. கிராமப்புறப் பெருமாள் கோயில்களில் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் இதர சமுகத்தை சேர்ந்தவர்கள் பூசை செய்து வருகின்றனர். பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், சடங்குகளில் முக்கிய இடம் பெறுகின்றன.
வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே முக்கிய சடங்குகளில் அனுமதிக்கின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசை முறை வேறுபடுகின்றது. வைணவ தீட்சையான திருவிலச்சினையை வலியுறுத்தும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு பாஞ்சராத்திரம் அணுக்கமானது.
கோயில் கட்டட, சிற்பக் கலை நூல்கள் (வாஸ்து நூல்கள்)
கோயில் கட்டட, சிற்பக் கலை நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே உள்ளன. ஆனால், இவை தமிழகத்துக்கு உரிய கிரந்த வரிவடிவத்திலேயே எழுதப்பட்டுள்ளன. பல தமிழ் கலைச் சொற்களும் அவற்றில் உள்ளன. இவை வட மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் விளக்கப்படுவது தமிழ் நாட்டுக் கலைதான்.
கட்டட, சிற்பக் கலை முதல் ஆசிரியன் மயன். மயனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. மயன் எழுதிய நூல் 'மயமதம்'. மயமதம் ஒரு தெளிவான, குழப்பமில்லாத கட்டட, சிற்பக்கலை நூல். 36 அதிகாரங்கள் 3300 பாடல்களைக் கொண்டது. சைவ நூல்களுள் ஒன்று. காமிகாகமத்தின் பூர்வ பகுதியில் உள்ள கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை சார்ந்த பாடல்கள் பல இதிலும் உள்ளன. சிற்பப் பகுதியில் சிவ, லிங்க உருவங்களுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. இதன் ஓலைச்சுவடிகள் கிரந்தம், தெலுங்கு அல்லது மலையாளத்தில் கிடைக்கின்றன. சோழர்கள், கங்கர்கள், நுளம்பர்கள் இதைப் பின்பற்றினர். இவர்களைத் தவிர சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கம்போடியாவின் கெமர் அரசர்கள் ஆகியோரும் இதை பின்பற்றினர்.. பொ. ஆ. 7-8 ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் இருநதாலும், பொ. ஆ. 11-12 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டது. கேரளாவிலும் கர்நாடகத்திலும் பொ.ஆ. 10-11 ஆம் நூற்றண்டு வரை மயமதம் பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு அங்கே அவை தனித்துவமான கட்டடக்கலைகள் அறிமுகமாகியன 13-14 ஆம் நூற்றாண்டு தமிழ் மொழிபெயர்ப்பு தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது.
பின்னர் வெவ்வேறு காலங்களில் பலர் கட்டட, சிற்பக் கலை நூல்களை யாத்துள்ளனர். மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் 32 நூல்களின் பட்டியலைத் தருகிறது. மனுசாரம் என்ற சிற்ப கட்டடக்கலை நூல் 28 நூல்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. அவற்றில் 18 மானசார நூற் பட்டியலில் இல்லாதவை. ஆக இவ்வாறு அறியப்பட்ட 50 நூல்களில் தற்போது கீழ்கண்ட 6 நூல்களே உள்ளன.
- மயமதம்
- விஸ்வகர்மீயம்
- மானசாரம்
- ஐந்திர மதம்
- மனுசாரம்
- காஸ்யபம்
இவை சிற்பக்கலை, கட்டடக்கலை இரண்டையும் விவரிக்கும் முழு நூல்கள். வாஸ்து சாஸ்திரம் என்றும் இவற்றை அழைப்பர்.
11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காஸ்யபம் கோயில் கட்டடக் கலை பற்றிய விரிவான விவரணைகளை அளிக்கிறது. மானசாரம் 14 நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால நூல்.
மேலும், 'வாஸ்துவித்யை', 'மனுஷ்யாலயச் சந்திரிகை' என்னும் இரு சிறந்த மனை நூல்கள் உள்ளன.
இவை தவிர, 'சாரஸ்வதீயம்', 'பிராம்மீயம்', 'சகளாதிகாரம்' என்னும் மூன்று முற்றிலும் சிற்பக் கலை பற்றி பேசும் நூல்கள் உள்ளன. அவை கட்டடக்கலை, மனை பற்றி பேசும் வாஸ்து நூல்கள் அல்ல.
'சில்பரத்தினம்'எனும் பிற்கால சிறு வாஸ்து நூல் மயமதம், காஸ்யபம் ஆகிய இரு நூல்களின் கொள்கைகளைச் சுருக்கமாகச் சொல்கிறது.
'நாராயணீயம்', 'சித்ரபாகுல்யம்' ஆகிய இரு நூல்களின் சில அத்தியாயங்களே கிடைக்கின்றன.
'சர்வார்த்த சிற்ப சிந்தாமணி', 'சிற்ப ரத்தினாகரம்' இரண்டும் தமிழிலான மனை நூல்களாகும்.
கூடுதலாக
28 சைவ ஆகமங்கள் சிவனின் வெவ்வேறு உறுப்புகளில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றன. 1. காமிகம் – திருவடிகள்; 2. யோகஜம் – கணைக்கால்கள்; 3. சிந்தியம் – கால்விரல்கள்; 4. காரணம் – கெண்டைக் கால்கள்; 5. அஜிதம் – முழந்தாள்; 6. தீப்தம் – தொடைகள்; 7. சூக்ஷ்மம் – குய்யம்; 8. ஸ்ஹஸ்ரம் – இடுப்பு; 9. அம்சுமதம்/அம்சுமான் – முதுகு; 10. சுப்ரபேதம் – தொப்புள்; 11. விஜயம் – வயிறு; 12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் – நாசி: 13. ஸ்வயம்புவம்/ஸ்வாயம்புவம் – முலை; 14. அனலம் /க்னேயம் – கண்கள்; 15. வீரபத்ரம்/வீரம் – கழுத்து; 16. ரௌரவம் – காதுகள்; 17. மகுடம் – திருமுடி; 18. விமலம் – கைகள், 19. சந்திரஞானம் – மார்பு; 20. பிம்பம் – முகம்; 21. புரோத்கீதம் – நாக்கு; 22. லளிதம் – கன்னங்கள்; 23. சித்தம் – நெற்றி; 24. சந்தானம் – குண்டலம்; 25. சர்வோக்தம்/ஸர்வோத்தம் – உபவீதம்; 26. பரமேஸ்வரம்/பரமேசுரம் – மாலை; 27. கிரணம் – இரத்தினா பரணம்; 28. வாதுளம் – ஆடை.
உதவி
கணபதி ஸ்தபதி வை; சிற்பச் செந்நூல்; 3 ஆம் வெளியீடு; 2001
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021