விமானம் என்பது இறைவனது வடிவம் அமைந்திருக்கும் கருவறைக் கட்டடம். வடமொழியில் 'பிரசாதம்'.
விமானம் மட்டுமே கூட கோயில் ஆக அமைய முடியும். ஆனால் விமானம் இல்லாது மற்ற கோயில் பகுதிகள் (மண்டபங்கள், கோபுரம் முதலியன) கோயில் ஆக முடியாது.
விமானம் விண்ணோக்கி எழும் இறைக்குறியீடு. ஆகமங்கள் அது 'ஸ்தூல லிங்கம்' என்றும், கருவறை இறைவன் 'சூஷ்ம லிங்கம்' என்றும் கூறுகின்றன. விமானம் உடல், இறையுருவம் உயிர்.
வடமொழியில் வி+மானம் என்று பிரிந்து 'சிறந்த அளவு' என்று பொருள்.
கோபுரம், நுழைவாயில் கட்டிடத்தை மட்டுமே குறிக்கும்,
விமானங்களின் வகைகள்
கலைப்பாணியைப் பொறுத்து விமானங்கள் மூன்று வகைப்படும்.
திராவிட விமானம் தளங்களால் அமைந்த நேர்கோட்டு பக்கங்களைக் கொண்ட பிரமிட் வடிவம் உடையது.
நாகர விமானம் சதுரக் கருவறைக்கு மேலே வளைந்த பக்கங்கள் கொண்ட மேற்பகுதியையும் (சிகரம்), அதன்மேல் வட்ட வடிவமான, ஓரத்தில் நெல்லி சுளைகள் போன்ற பிதுக்கங்களை உடைய வட்டும் (அமலகம்) கொண்டது.
வேசர விமானம் நாகர, திராவிட விமானங்களின் கலப்புப் பாணி.
 |
விமான வகைகள் (நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்) |
(காமிகாகமம் மட்டும் கூடுதலாக மூன்று வ்கை விமானங்களைக் குறிப்பிடுகிறது - சார்வதேசிகம், காலிங்கம், வராடம்)
அமைவிடம் வகைகள்
மேற்கண்ட மூவகை விமானங்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் தோன்றி வளர்ந்தவை.
- திராவிட வகை விமானங்கள் கிருஷ்ணா-துங்கபத்திரை நதிகளுக்கு தெற்கில்.
- நாகர வகை விமானங்கள் பொதுவாக விந்திய மலைக்கு வடக்கே .
- வேசர விமானங்கள் இடைப்பட்ட தக்காணம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில்
திராவிட விமானத்தின் அங்கங்கள்
திராவிட விமானம் அடிப்படையாக ஆறு அங்கங்களைக் (ஷட்வர்க்கம், ஷடாங்கம்) கொண்டது. அவை கீழிருந்து மேலாக:
(கோயில் கட்டட அங்கங்களையும் அவற்றின் துணை உறுப்புகளையும் கீழிருந்து மேலாக சொல்வது மரபு)
- அதிஷ்டானம்
- பித்தி
- பிரஸ்தரம்
- கிரீவம்
- சிகரம்
- ஸ்தூபி
 |
விமானத்தின் 6 அங்கங்கள் |
காமிகாகமம் மட்டும் கூடுதலாக இரு உறுப்புகளைச் சொல்கிறது. தாங்குதளத்திற்கு கீழே 'மூலம்', கலசத்திற்கு மேலே 'சூலம்'. மூலம் எங்கும் காணக்கிடைக்கவில்லை. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் விமானத்தில் கலசத்தின் மேல் சூலம் உள்ளது. சூலம் மாமல்லபுரம் கணேச ரதத்தில் கலசங்களுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.
 |
ஸ்ரீ சைலம் விமானத்தின் ஸ்தூபியின் மேல் சூலம் |
விமானம் இறைவன் உடல் என்று கொண்டு அதன் ஆறு அங்கங்களை மனித வடிவிலான இறைவனின் உடல் உறுப்புகளோடு ஒப்பிடும் மரபு உள்ளது.
- அதிஷ்டானம் - அடி (பாதம்)
- பித்தி - கால்
- பிரஸ்தரம் - தோள்
- கிரீவம் - கழுத்து
- சிகரம் - தலை
- ஸ்தூபி - முடி
இதில் பிரஸ்தரம் முதல் ஸ்தூபி வரையான ஒப்பீடு தெளிவானது. அதிஷ்டான, பித்தி ஒப்பீடுகள் குறித்து மாற்று கருத்துகள் உள்ளன. உபபீடம் - பாதம், அதிஷ்டானம் - முட்டி, கும்ப பஞ்சரம் - தொப்புள், தூண்கள் - கைகள், மகா நாசிகை - மூக்கு, ஷூத்ர நாசி - கண்கள் என்ற வர்ணனையும் உண்டு.
திராவிட விமானங்களின் வகைகள்
திராவிட பாணி விமானங்கள் மூன்று வகை:
- நாகரம் - 4 பட்டை வடிவம்
- வேசரம் - வட்ட வடிவம்
- திராவிடம் - 6 / 8 பட்டை வடிவம் (பல பட்டை)
இதை விமானங்களின் மூவகைப் கலைப் பாணிகளோடு குழப்பிக்கொள்ளக் கூடாது.
மேற்கண்ட விமான வகைகளை இரு வகையாக பிரிக்கலாம்.
- சுத்த - உபானம் முதல் ஸ்தூபி வரை (விமானத்தின் ஆறு அங்கங்களும்) ஓரே வடிவமாக இருப்பது
- கலப்பு - உபானம் முதல் பிரஸ்தரம் வரை நாகரமாகவும் அதற்கு மேல் வேறு வடிவமாகவும் இருப்பது.
நாகர விமானம் சுத்த நாகரமாகவே அமைய முடியும். கலப்பு நாகர வகை இல்லை.
வேசர, திராவிட விமானங்கள் சுத்த, கலப்பு இரு வகையாகவும் இருக்கலாம்.
- சுத்த வேசரம், சுத்த திராவிடம் - உபானம் முதல் ஸ்தூபி வரை (விமானத்தின் ஆறு அங்கங்களும்) வேசரமாகவோ, திராவிடமாகவோ இருப்பது.
- கலப்பு வேசரம், கலப்பு திராவிடம் - உபானம் முதல் பிரஸ்தரம் வரை நாகரமாகவும் அதற்கு மேல் கண்டம் மற்றும் சிகரத்தின் வடிவம் வேசரம் அல்லது திராவிடமாக இருப்பது.
ஸ்தூபி, கண்டம் மற்றும் சிகரத்தின் வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும் (பழைய கல்லாலான ஸ்தூபிகள் அவ்வாறே உள்ளன). ஆனாலும் நடை முறையில் பிற்காலத்தில் புதிதாகவோ, உடைந்த பழைய ஸ்தூபிகளுக்குப் பதிலாகவோ அமைந்த ஸ்தூபிகள் வேசரமாகவே உள்ளன. எனவே, கண்டம் மற்றும் சிகரத்தின் வடிவமே விமானம் நாகரமா, வேசரமா, திராவிடமா என்பதைத் தீர்மானிக்கிறது. (கண்டமும் சிகரமும் ஒரே வடிவை உடையவை என்பதாலும் கண்டத்தைவிட சிகரத்தை தெளிவாகக் காண இயலும் என்பதாலும் நடைமுறையில் சிகரத்தின் வடிவைக் கொண்டு திராவிட விமானத்தின் வகையை எளிதாகத் தீர்மானிக்கலாம்).
நாகர விமானம்
விமானம் முழுவதும், அதாவது அதிஷ்டானத்தின் கீழ் உறுப்பான உபானத்தில் இருந்து கலசம் வரை, நான்கு பட்டை வடிவம் கொண்டது.இது இரு வகை:
- சதுரம் (சதுரஸ்ரம்)- இது 'கூடம்' எனப்படும். ஒற்றைக் ஸ்தூபி உடையது.
- செவ்வகம் (ஆயதஸ்ரம், ஆயத்த நாகரம்) - வண்டி கூண்டு போன்ற சிகர வடிவம் உடையது. வரிசையாக அமைந்த ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தூபிகள் கொண்டது. இது இருவகைப்படும்.
- ஆறு அங்க வகை 'சாலை' அல்லது 'சாலாகாரம்' எனப்படும். இது பெருமாள், அம்மன், சப்தகன்னியர் கோயில்களுக்கு உரியது.
- கிரீவம் இல்லாமல் மற்ற ஐந்து அங்கங்கள் மட்டுமே உள்ள வகை 'சபை' அல்லது 'சபாகாரம்' எனப்படும். இது குவி வட்ட வடிவில் நான்கு புறமும் சரிந்த சிகரத்தை உடையது. சிகரத்தில் அலங்கார அமைப்புகள் இருப்பதில்லை.
 |
நாகர விமான வகைகள் (ஆயதஸ்ரம், ஆயத சதுரஸ்ரம் என்றும் அழைக்கப்படும்) |
 |
சதுரஸ்ர நாகர விமானம் (கூடம்) (கல்லாலான ஸ்தூபியும் சதுரமாய் இருப்பதைக் காண்க) |
 |
சாலாகார விமானம் |
 |
சபை/ சபாகாரம் - சிதம்பரம் பொன்னம்பலம் |
வேசர விமானம்
கண்டம் மற்றும் சிகரம் வட்டவடிவம் கொண்டது. இது மூன்று வகை:
- வட்டம் (விருத்தம் / வார்த்துலம்)
- நீள் வட்டம்
- தூங்கானை வடிவம் (கஜபிருஷ்டம், ஹஸ்திபிருஷ்டம்)
இவை சுத்த வகையாகவோ, கலப்பு வகையாகவோ இருக்கலாம்.
நீள் வட்ட வடிவம் மூன்று விதமாக அமையலாம். இவையும் சுத்த வகையாகவோ அல்லது கலப்பு வகையாகவோ அமையலாம்.

விருத்த வேசர விமானம் ஒரு ஸ்தூபியையும், விருத்தாயத, கஜபிரிஷ்ட விமானங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தூபிகளையும் கொண்டிருக்கும்.
கஜபிருஷ்டம் 'துவையஸ்ர வேசரம்' என்றும் அழைக்கப்படும்.
மாமல்லபுரத்தில் காணப்படும் குட்டி விமானம் சுத்த விருத்த வேசர விமானம் ஆகும். மயிலாடுதுறை அருகிலுள்ள நரசிங்கம்பேட்டையிலும் சுத்த வேசர விமானம் உள்ளது.
 |
சுத்த விருத்த வேசரம் மகாபலிபுரம் (உபபீடம் மட்டும் எண் பட்டை) |
 |
சுத்த விருத்த வேசரம் |
 |
கலப்பு விருத்த வேசர விமானம் எசாலம் (விழுப்புரம் அருகில்) |
கஜபிருஷ்ட விமானங்கள் தொண்டை மண்டலத்திற்கு உரியவை. அங்குள்ள புவியியல் அமைப்பின்படி மேற்கிலுள்ள ஏரிகள், மேட்டுப்பகுதிகளில் இருந்து வேகமாக வரும் நீரை எதிர்கொள்ளும் வகையில் உருவாகியது கஜபிருஷ்ட வடிவம். கஜபிருஷ்ட விமானங்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியவை. மேற்கு பக்கம் நீர் வேகத்தை எதிர்கொள்ள வட்டமாக அமைந்தவை.
 |
கலப்பு கஜபிருஷ்ட விமானம் வீரட்டானேசுவரர் கோயில், திருத்தணி |
தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் ஜ்வரஹரேசுவரர் கோயில், அழகர் கோயில் விமானங்கள் மட்டுமே சுத்த விருத்தாயத வேசர வடிவம் உடையவை.
 |
சுத்த விருத்தாயத வேசர விமானம் ஜ்வரஹரேசுவரர் கோயில், காஞ்சிபுரம் |
 |
கலப்பு விருத்தாயத வேசர விமானம் திருத்தங்கல் பெருமாள் கோயில் (நீட்டிய முகப்பு நாசியும் (சுக நாசி), பூமி தேசத்தில் பற்களும் கவனிக்கத்தக்கன) |
 |
நீள் வட்ட வடிவம் மூன்றாம் வகை ரங்கநாதர் கோயில், எருக்கம்பட்டு
|
திராவிட விமானம்
ஆறு அல்லது எட்டு பட்டை வடிவ கண்டம், சிகரம் உடையது. (கீழ் மூன்று அங்கங்கள் நான்கு பட்டையாக இருக்கலாம்). இது இரு வகை:- ஆறு பட்டை (ஷடஸ்ரம்)
- எட்டு பட்டை (அஷ்டஸ்ரம்)
இந்த வடிவங்கள் சுத்த வகையாகவோ, கலப்பு வகையாகவோ இருக்கலாம்.
பட்டைகள் சமமாகவோ அல்லது நீள் வடிவமாகவோ இருக்கலாம்.
முற்கால முழு திராவிட விமானம் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை. தற்காலத்தில் பவானி சங்கமேசுவரர் கோயில் அம்மன் சந்நிதி, காரைக்குடி தமிழ்த்தாய் கோயில், திருவண்ணாமலை வராகி கோயில், திருவண்ணாமலை யோகி சூரத் குமார் கோயில் போன்ற முழு 8 பட்டைவிமானங்கள் உள்ளன.
 |
சுத்த அஷ்டஸ்ர திராவிட விமானம் பவானி சங்கமேசுவரர் கோயில்; காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் |
 |
சுத்த அஷ்டஸ்ர திராவிட விமானம் திருவண்ணாமலை வராகி கோயில் |
 |
சுத்த அஷ்டஸ்ர திராவிட விமானம் திருவண்ணாமலை வராகி கோயில் |
 |
கலப்பு அஷ்டஸ்ர திராவிட விமானம் (எட்டு பட்டை) நண்டாங்கோயில் கற்கடேசுவரர் கோயில் |
மாமல்லபுரம் நகுல சகாதேவ ரதத்தில் லலாட மகா நாசிகையில் 6 பட்டை விமானத்தின் சிற்பம் உள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட சில கோயில்கள் (வட பழனி, அவினாசி முதலியன 6 பட்டை திராவிட கோயில்களாக உள்ளஅன,
 |
கலப்பு ஷடஸ்ர (6 பட்டை) திராவிட விமானம் |
விமான வகைகள் சுருக்கமாக
| | |
(ஆயதஸ்ரம்/ ஆயத சதுரஸ்ரம்) | |
|
| | |
| |
|
3. நாகரத்தில் மூலைகள் மட்டும் விருத்தம் |
| |
| | |
| |
நாகரம் சுத்த நாகரமாக மட்டும்தான் இருக்கும். வேசர, திராவிட வகைகள் சுத்தமாகவோ, கலப்பாகவோ இருக்கலாம்.
தலம்
பித்தியும், பிரஸ்தரமும் சேர்ந்து ஒரு 'தலம்' ஆகும். இதைத் 'தளம்' என்றும் 'நிலை' என்றும் அழைக்கலாம்.
ஒரு தல விமானத்தின் பிரஸ்தரத்திற்கும், கிரீவத்திற்கும் இடையில் கூடுதல் தளங்கள் அமையும். எத்தனை தலங்கள் இருந்தாலும் ஒரு விமானத்தில் அதிஷ்டானம், கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகிய 4 உறுப்புகள் ஒரு முறைதான் இடம்பெறும்.
இரு தல விமானம்
- அதிஷ்டானம்
- பித்தி
- பிரஸ்தரம்
- பித்தி
- பிரஸ்தரம்
- கிரீவம்
- சிகரம்
- ஸ்தூபி
4 , 5 அங்க விமானங்கள்
மாமல்லபுரம் திரௌபதி ரதம் அதிஷ்டானம், பித்தி, சிகரம், ஸ்தூபி ஆகிய 4 அங்கங்கள் மட்டுமே கொண்ட விமானம். விமானங்களின் தலங்களின் மேல் உள்ள ஹாரங்களில் உள்ள கர்ணக் கூடுகள், சாலைகள் என்னும் சிறு விமானங்கள் இவ்வகை 4 அங்க விமானங்களாக அமைவதுண்டு..
 |
நான்கு அங்க விமானம் (பிரஸ்தரம், கிரீவம் இல்லை) திரௌபதி ரதம், மாமல்லபுரம் |
இது போல அதிஷ்டானம், பித்தி, பிரஸ்தரம், சிகரம், ஸ்தூபி ஆகிய 5 அங்கங்கள் மட்டுமே கொண்ட, கிரீவம் இல்லாத விமானங்கள் உண்டு. மேலே குறிப்பிடப்பட்ட சபாகார விமானம் இவ்வகையைச் சேர்ந்தது.
 |
5 அங்க விமானம் (கிரீவம் இல்லை) வெங்களூர் கண்டமாதேவி அருகில் |
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
ச.கமலக்கண்ணன்; கட்டடக்கலை ஆய்வு - தொடர்; வரலாறு.காம் இணைய இதழ் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3
Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)
சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I
சௌந்தரி ராஜ்குமார், சுரேந்திரன் ; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
திரௌபதி ரதம் படம்: Samrajclicks, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons